உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டீயுடன் காத்திருந்த தி.மு.க.,வினர்; கண்டுகொள்ளாத அ.தி.மு.க.,வினர்

டீயுடன் காத்திருந்த தி.மு.க.,வினர்; கண்டுகொள்ளாத அ.தி.மு.க.,வினர்

மித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.''மித்து... நீ அஞ்சு ரூபாயையாவது கண்ணுல காட்றியா... ஆனா, தெற்கு தாலுகா ஆபீஸ்ல தாசில்தாருக்கு துணையா இருக்கிற அதிகாரி கிட்டயோ, பணமா குவியுதாம்; லஞ்சம் கேக்குறதுல புது 'டிரிக்' கையாள்றாராம்.''கலெக்டரோட கார், ஒர்க்ஷாப்பில் பழுதுபார்க்க 65 ஆயிரம் ரூபாய் ஆயிடுச்சு... அதை நீங்கதான் செலுத்தணும்னு சொல்லி பட்டா மாறுதலுக்கு வர்றவங்ககிட்ட வசூல் வேட்டை நடத்துறாராம்.''சமீபத்துல, தன்னோட பேர்ல பட்டா இருந்தும், ஆன்லைன்ல அப்டேட் செய்யலையேன்னு அதிகாரிட்ட ஒருத்தர் கேட்ருக்கார். ஒர்க் ஷாப் செலவுக்கு, அஞ்சாயிரம் கொடுங்கன்னு கேட்ருக்காரு அதிகாரி. பணம் கொடுக்காததால மனுவையும் நிராகரிச்சிருக்காரு.''டென்ஷனான அந்த நபர், கலெக்டர் காதுக்கே விஷயத்தைக் கொண்டு போயிட்டாராம்''''ஆமாமா... எவ்ளோ நாள்தான் பொய் சொல்லியே வசூலிக்க முடியும்?''அழுத்தமாக கேட்டாள் மித்ரா.''மித்து... 'மக்களுடன் மேயர்' திட்டத்துல, மேயர் தினேஷ்குமார், 5வது வார்டைச் சேர்ந்த திருக்குமரன் நகர், ஜெ.ஜெ., நகர் அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதி மக்கள்ட்ட குறை கேட்டாராம். வார்டு கவுன் சிலரை அழைக்கலையாம்.''கவுன்சிலரோட உறவினர் ஒருத்தரு, ஏன் கவுன்சிலரை அழைக்கலைன்னு கேட்டாராம்.''அவரு அ.தி.மு.க., கவுன்சிலரு... அதனால அழைக்கலைன்னு வெளிப்படையாவா மேயர் சொல்ல முடியும்? அ.தி.மு.க., கவுன்சிலர் வார்டு கள்ல, கவுன்சிலரை மேயர் அழைக்கறதில்லைன்னு புகார் தொடருது...''''இதெல்லாம், அரசியல்ல சகஜம்க்கா''மித்ரா யதார்த்தத்தைச் சொன்னாள்.

அ.தி.மு.க.,வில் சர்ச்சை

''அக்கா... மாநகராட்சி சொத்து வரி உயர்வு தொடர்பா அ.தி.மு.க.,காரங்க போராட்டம் நடத்துனாங்கள்ல...''இதுதொடர்பான பேனர், சமூக வலைதளங்கள்ல வெளியான நோட்டீஸ்... இதுல எல்லாம் முன்னாள் எம்.பி., சிவசாமி, பல்லடம் எம்.எல்.ஏ., ஆனந்தன் படங்களைத் தவிர்த்துட்டாங்களாம்.''அமைப்பு செயலாளர் களான இவங்களையே ஒதுக்கி 'அரசியல்' பண்றதான்னு, சிவசாமி, ஆனந்தன் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்கள்ல திட்டித்தீர்க்கறாங்களாம்.''அதேபோல, மாநகராட்சில 10 வார்டுகள் பல்லடம் தொகுதில இருந்தும் எம்.எல்.ஏ., ஆனந்தனை அழைக்காமல் கவுன்சிலர்கள் குழுவாகச் சென்று பொதுச்செயலாளர் பழனிசாமியைச் சந்திச்சாங்க... இதுலயும் அதிருப்தி நிலவுதாம்''''மித்து... கோஷ்டி அரசியல்ல இதையெல்லாம் தாண்டித்தான் ஜெயிச்சாகணும்''மித்ரா ஆமோதித்தாள்.

'புயல்' ஓய்ந்தது

''சித்ராக்கா... சொத்து வரி உயர்வைக் கண்டிச்சு தி.மு.க., கூட்டணில உள்ள கம்யூ., கட்சிக்காரங்களும் போராட்டம் நடத்துனாங்கள்ல...''மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தப்ப, சொத்து வரி உயர்வுக்கு ஆதரவு கொடுத்துட்டு, இப்ப மக்களை ஏமாத்த கம்யூ., கட்சிக்காரங்க வெளியில் நாடகமாடுறாங்கன்னு சொல்லி, மாநகராட்சியில அந்த தீர்மானத்துக்கு ஆதரவு கொடுத்த நகலை, தாமரைக் கட்சிக்காரங்க சமூக வலைதளங்கள்ல ேஷர் பண்றாங்களாம்''''நானும் பார்த்தேன் மித்து... துணை முதல்வர் விசிட் அடிச்சாருல்ல... சொத்து வரி உயர்வு தொடர்பா நிருபர்கள் கேள்வி கேட்டப்ப, பதில் சொல்லாம போயிட்டாரே''''ஆமாமா... 'பாசிட்டிவ்'வா ரெண்டு வார்த்தையாவது அவர் சொல்லியிருக்கலாம்க்கா... துணை முதல்வர் ஆய்வுக்கூட்டத்துல அதிகாரிங்க பரபரப்பா இருந்தாங்களாமே...''''ஆமா மித்து... இவ்ளோ கேள்விக்கணைகள் பாயும்னு அதிகாரிங்க நினைக்கலையாம். ஆய்வு முடிஞ்சவுடனே ஒரு அதிகாரி, 'புயல் அடிச்சு ஓய்ஞ்ச மாதிரி இருக்கு'ன்னு கமென்ட் பண்ணுனாராம்''ஆச்சர்யப்பட்டாள் மித்ரா.

'வினோத' ஆதரவு

''சித்ராக்கா... மினிஸ்டர் உதவியாளரா இருந்த வருவாய் துறையைச் சேர்ந்த அலுவலர், மண் கடத்தல் நபர்களுக்கு ஆதரவாக இருந்தாரு... கடும் எதிர்ப்பு காரணமாக மாவட்ட நிர்வாகம் அவரை பணியிடம் மாற்றம் செஞ்சுச்சு...''ஆறு மாசமாகியும் பணியில அவர் சேரல. கலெக்டரிடம் விவசாயிகள் காட்டமா இதைச் சொன்னாங்க... ''நீங்க சொன்ன மாதிரி டிரான்ஸ்பர் பண்ணியாச்சுல்ல... அப்புறம் ஏன் கவலைப்படறீங்க'ன்னு கலெக்டரும் பதில் சொன்னாரு...''இப்ப என்னாச்சுன்னா மீண்டும் அதே போஸ்டிங்ல வந்து ஜம்முன்னு ஒட்டிக்கிட்டார். 'வினோத'மானவருக்கு ஆளும்கட்சி பவர் சென்டர் ஆதரவு இருக்கும்போது என்ன கவலை?''அங்கலாய்த்தாள் மித்ரா.

ஆய்வு ஜரூர்

''மித்து... மாநகர், புறநகர் ஸ்டேஷன்கள்ல திருட்டு, வழிப்பறி வழக்குகள்ல, மீட்கப்படற நகை, பணத்தை அதிகாரிகளுக்குத் தெரியாம தனிப்படை போலீஸ்காரங்க சுருட்டிடறாங்கன்னு போன வாரம் சொன்னோம்ல...''உடனே, மாவட்டத்திலயும், மாநகர்லயும் தனிப்படையினரோட கைவரிசை குறித்து ஆய்வு செய்ய ஆரம்பிச்சுட்டாங்களாம். தப்பு பண்ணுனா நடவடிக்கை பாயும்னு அதிகாரிகள் வார்னிங்கும் பண்ணியிருக்காங்க...''''பரவாயில்லையேக்கா''மித்ரா ஆறுதல் அடைந்தாள்.''சித்ராக்கா... திருப்பூர் மாவட்ட எஸ்.பி., ஆபீஸ் வளாகத்துல இருக்கிற போலீஸ் கேன்டீன்ல மக்களைச் சங்கடப்படுத்துற மாதிரி நடந்துக் கறாங்களாம்.''கடையடைப்பு போராட்டம் நடந்த அன்னிக்கு பலரும் அங்க சாப்பிடப் போயிருக்காங்க...''சில்லரை இல்லன்னு சொல்றது... அலட்சியமா பதில் சொல்றதுன்னு அங்க இருக்கிற ஊழியர்கள், மக்கள் எதுக்கு இங்க வந்தோம்னு யோசிக்கற அளவு நடந்துட்டாங்க''''சொல்லிட்டேல்ல... அதிகாரி காதுக்குப்போயிடும்''சித்ரா உறுதிபடச்சொன்னாள்.''சித்ராக்கா... திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், தற்கொலை முயற்சி செஞ்சவங்களோட உயிரைக் காப்பாத்த தனி சிகிச்சை பிரிவு இருக்குது.''சிகிச்சைக்கு அனுமதிக்கப்படற பெரும்பாலானோர், படுக்கைக்குக் கொண்டுபோனவுடனே 'சார்... மன்னிச்சிடுங்க... வீட்டுல இருக்கிறவுங்கள மிரட்டத் தான் இப்படி பண்ணினேன். உடம்பு நல்லாத்தான் இருக்கு; எதுவும் பண்ணாதீங்கன்னு கெஞ்சுறாங்களாம்.''கடுப்பாகறாங்களாம் டாக்டர்கள்''சித்ரா வெறுப்பாகச் சொன்னாள்.

தாழ்தள பஸ் வராது

''மித்து... தாழ்தள சொகுசு பஸ்கள், திருப்பூர் மண்டலத்துக்கு கிடையாதான்னு அதிகாரிகள் கோவை கோட்ட அதிகாரிகளைக் கேட்டாங்களாம்.''திருப்பூர்ல இப்ப இருக்கிற ரோடு கண்டிஷனுக்கு தாழ்தள பஸ் வந்துச்சுன்னா அடிப்பாகம் உரசும். இப்போதைக்கு இல்லைன்னு ரிஜெக்ட் பண்ணீட்டாங்களாம்''''இப்படியொரு கேவலமா''நகைத்தாள் சித்ரா.

வீணாய்ப்போன டீ

''மித்து... ஊத்துக்குளி ரோட்ல டூவீலர் ஓட்டிகளை நிறுத்தி சோதனை செய்ற போலீசார் ஒருமைலதான் வாய்க்கு வந்தபடி பேசுறாங்களாம். வயசுக்குக்கூட மரியாதை குடுக்கறதில்லையாம்''''அக்கா... இப்படிப்பட்ட போலீஸ்காரங்க அவங்களா திருந்தணும்... இல்லாட்டி மக்களே சந்தர்ப்பம் கிடைக்குறப்ப மாட்டிவிடத்தான் போறாங்க...''''மித்து... அவிநாசி கோட்டத்துல வஞ்சிபாளையம் மின் பிரிவு அலுவலகத்துல, கனெக்ஷன் கொடுக்க விண்ணப்பிச்சவுங்க கிட்ட 12,000, 15,000 ரூபாய்ன்னு பேரம் பேசி வசூல் பண்றாங்களாம்.''பணம் கொடுக்கலேன்னா விண்ணப்பங்களைக் கிடப்பில் போட்ருவாங்களாம். அலைக்கழிச்ச பின்னாடி மொத்தமா அமவுன்ட் கறந்துடறாங்களாம். ஆபீசர்ஸ்தான் இதை மாத்திக்காட்டணும்''மித்ரா கலங்கினாள்.''மித்து... ஸ்ட்ராங்கா ஒரு டீ போட்டுக் கொடு''உத்தரவிட்டாள் சித்ரா.''சித்ராக்கா... டீ போட்டா அ.தி.மு.க., காரங்க மாதிரி குடிக்காம இருக்க மாட்டேல்ல...''மாநகராட்சி 2வது மண்டலத் தலைவர் கோவிந்தராஜ், மனு கொடுக்க வர்ற மக்களுக்கு டீ வாங்கிக் கொடுக்கறது வழக்கம்.''போன வாரம், 7வது வார்டுல அடிப்படை வசதி கோரி அ.தி.மு.க., சார்பில, எம்.எல்.ஏ., விஜயகுமார் தலைமையில முற்றுகைப்போராட்டம் நடத்துனாங்க... இவங்களுக்கு டீ கொடுக்க மண்டலத் தலைவர் ஏற்பாடு பண்ணியிருந்தாரு; ஆனா, உதவி கமிஷனர்ட்ட மனு கொடுத்துட்டு அ.தி.மு.க.,வினர் கெளம்பீட்டாங்களாம்.''டீ வேஸ்ட்டா போயிடுச்சு... தி.மு.க.,வைச் சேர்ந்த மண்டலத் தலைவர்ட்ட போய் ஏன் மனு கொடுக்கணும்னு அ.தி.மு.க.,காரங்க நெனச்சிட்டாங்க போல. காத்திருந்த மண்டலத்தலைவருக்கும், தி.மு.க.,காரங்களுக்கும் சங்கடமா போச்சாம்''பேசிக்கொண்டே சுடச்சுட டீயுடன் வந்தாள் மித்ரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
டிச 24, 2024 23:03

சென்னையில் ஓடும் தாழ்தள சொகுசு பஸ்கள், பயணத்திற்கு ஏற்ற வகையில் இல்லை. பஸ்சின் உள்ளே முன்பக்கம் இரண்டு பெரிய box போல் பாதி இடத்தை அடைத்துக் கொண்டுள்ளது. பின் இருக்கைகளுக்கு பஸ்சின் உள்ளே படியேறி செல்ல வேண்டியுள்ளது. நடுவில் 8 பேர்கள் தான் சௌகரியமாக அமர முடியும். என்ன வேண்டி கிடக்கிறது தாழ்தள சொகுசு பஸ். எந்த அறிவு கொழுந்து இந்த பஸ்சை Design பண்ணினார்..??


சமீபத்திய செய்தி