பொன்முடிக்கு மீண்டும் து.பொ.செயலர் பதவி; கணக்கு போட்டு காய் நகர்த்தும் தி.மு.க.,
சென்னை: ஹிந்து மதம் குறித்து சர்ச்சையாக பேசியதால், அமைச்சர் பதவியை இழந்ததுடன், கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு, மீண்டும் கட்சி பதவி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கும், அமைச்சர் சாமிநாதனுக்கும், கட்சியில் துணை பொதுச்செயலர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. தி.மு.க.,வின் மூத்த அமைச்சராக இருந்த பொன்முடி, பெண்களுக்கான இலவச பஸ் பாஸ் குறித்து பேசும்போது, 'ஓசி பயணம்' என குறிப்பிட்டது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின், ஹிந்து மதம் குறித்து ஆபாசமாக பேசினார். இதனால், பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதை தொடர்ந்து, அவரிடம் இருந்து கட்சியின் துணை பொதுச்செயலர் மற்றும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில், தேர்தல் செலவை முழுமையாக பொன்முடி ஏற்றுக் கொள்வார் என்பதாலும், அவருக்கு மீண்டும் கட்சியில் துணை பொதுச்செயலர் பதவி வழங்கப்பட்டுஉள்ளது. உடையார் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், உடையார் இனத்தவர் தி.மு.க.,வுக்கு ஆதரவாக தேர்தலில் செயல்படுவர் என்ற கணக்கிலும் அவருக்கு பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வலுவாக இருக்கிறது. அக்கூட்டணியில் த.வெ.க.,வும் இணைந்தால், தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்படும். எனவே, கொங்கு மண்டலத்தில் தி.மு.க.,வை பலப்படுத்தவும், வெள்ளாளர் கவுண்டர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் வழங்கவும் தி.மு.க., தலைமை திட்டமிட்டது. ஏற்கனவே, வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி, துணை பொதுச்செயலர் பதவியை ராஜினாமா செய்து விட்டதால், அவரது பதவி காலியாகவே இருந்தது. எனவே தான், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர் சாமிநாதனுக்கு, துணை பொதுச்செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் அறிக்கை: பொன்முடி, சாமிநாதன் ஆகியோர் தி.மு.க., துணை பொதுச்செயலர்களாக நியமிக்கப்படுகின்றனர். திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வந்த சாமிநாதன், துணை பொதுச்செயலராக நியமிக்கப்பட்டதால், அவருக்கு பதிலாக, திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலர் பதவி வகித்து வந்த பத்மநாபன், திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால், அவருக்கு பதிலாக, திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக ஈஸ்வரசாமி எம்.பி., நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.