தேர்தல் மின்னணு தகவல்களை இனி சுலபமாக பெற முடியாது
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தேர்தல் தொடர்பான ஆவணங்களை பொதுமக்கள் பார்ப்பது தொடர்பான சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சிசிடிவி கேமரா பதிவுகள், வீடியோ பதிவு போன்ற மின்னணு தகவல்களை இனி பொதுமக்கள் கோர முடியாது.தேர்தல் நடத்தும் விதிகளின்படி, தேர்தல் தொடர்பான ஆவணங்களை, பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்படுகிறது. வேட்பாளரின் வேட்பு மனு, தேர்தல் முடிவுகள், வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கு உள்ளிட்டவை இதில் அடங்கும்.சமீபத்தில், ஹரியானா சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்த, ஹரியானா மற்றும் பஞ்சாப் உயர் நீதிமன்றம், தேர்தல் தொடர்பான சிசிடிவி கேமரா பதிவுகள், வெப்காஸ்டிங், வேட்பாளர் தொடர்பான வீடியோ பதிவுகள் உள்ளிட்டவை வழங்க உத்தரவிட்டது.இந்நிலையில், தேர்தல் கமிஷனின் பரிந்துரைகளின்படி, தேர்தல் நடத்தும் விதி எண், 93ல் திருத்தம் செய்து, மத்திய சட்ட அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டுஉள்ளது. இதன்படி, சிசிடிவி உள்ளிட்ட மின்னணு ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு இனி வைக்கப்படாது. அதே நேரத்தில், வேட்பு மனு உள்ளிட்ட ஆவணங்களை வழக்கம்போல் பார்க்க முடியும். மின்னணு ஆவணங்கள் தேவைப்படுவோர், நீதிமன்றத்தின் வாயிலாகவே கோர முடியும்.'சிசிடிவி கேமரா பதிவுகள் உள்ளிட்டவை, தேர்தல் தொடர்பான ஆவணங்கள் அல்ல. அவை, தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கான நடைமுறைகளே. இவற்றை பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கத் தேவையில்லை. தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதால், இவற்றின் ரகசியம் காக்கவே, இந்த சட்ட விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது' என, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.