திருச்சி : 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுாரில் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில் தான், இரு முறை விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது; 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் தரப்பட்டது; வறட்சி நிவாரணமாக 2,400 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால், தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை. விவசாயிகளுக்கு எதிரான இந்த தி.மு.க., அரசு இன்னும் தொடர வேண்டுமா? மண்ணச்சநல்லுார் தொகுதி தி.மு.க., - -எம்.எல்.ஏ., கதிரவனுக்கு சொந்தமான மருத்துவமனையில், கிட்னி திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு, அங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் அனுமதியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஆனால், இதுவரை தி.மு.க., - -எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை இல்லை. பணம், நகை திருட்டை பார்த்திருக்கிறோம். கிட்னி திருட்டை இங்கு தான் பார்க்கிறோம். தி.மு.க., - எம்.எல்.ஏ., மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றவர்கள், ஸ்கேன் செய்து, தங்கள் உடலில் கிட்னி உள்ளிட்ட உள்ளுறுப்புகள் இருக்கிறதா, திருடப்பட்டு விட்டதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஒரு பெண்ணின் வறுமையை பயன்படுத்தி, கிட்னிக்கு பதில், கல்லீரலை எடுத்துள்ளனர். 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் வாங்க, ஊர் மக்கள் அனைவரின் கிட்னியை கழற்ற வேண்டும் என்று அபத்தமாக பொதுவெளியில் தி.மு.க., - எம்.எல்.ஏ., கதிரவன் பேசியுள்ளார். இப்படிப்பட்டவர் எம்.எல்.ஏ.,வாக இருப்பது அவமானம். தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, 100 நாள் வேலை திட்டத்தை, 150 நாட்களாக உயர்த்தாமல், 50 நாட்களாக குறைத்து விட்டனர். காஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய் வழங்கவில்லை; கல்விக்கடன் ரத்து செய்யவில்லை. அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் இல்லாமல், 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்ற அ.தி.மு.க., அரசின் திட்டத்தால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பலனடைகின்றனர். முதல்வர் ஸ்டாலினுக்கு எப்போதும் குடும்ப சிந்தனை தான். ஆனால், மக்களை பற்றியே அ.தி.மு.க., எப்போதும் சிந்திக்கிறது. தமிழகத்தில் ஒரு குடும்பம் பிழைக்க, தமிழக மக்கள் வாட்டி வதைக்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட ஆட்சி தேவையா? அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஏழை விவசாயிகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும்; தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை வழங்கப்படும். இவ்வாறு பழனிசாமி பேசினார். கூடவே இருந்த தங்கமணி அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று மண்ணச்சநல்லுார், துறையூர், முசிறி தொகுதிகளில் பிரசாரம் செய்தபோது, சமீப காலமாக அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்ட, முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவருடன் கூடவே இருந்தார். பனையகுறிச்சி பகுதியில், 'நடந்தாய் வாழி காவிரி நாயகனே' என்ற பதாகையுடன் இருந்த விவசாயிகள், நெல்மணிகள் மற்றும் பூக்களை நிரப்பி வைத்திருந்த ஆழாக்கை பழனிசாமி கையில் கொடுத்து, காவிரி ஆற்றில் துாவுமாறு கேட்டுக் கொண்டனர். அப்படி செய்தால், விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கும் எனவும் வேண்டுகோள் விடுத்ததையடுத்து, பழனிசாமி மகிழ்ச்சியுடன் அதை பெற்று, நெல்மணிகளையும், பூக்களையும் காவிரி ஆற்றில் துாவினார்.