உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அவர் சொன்னது எங்களை அல்ல; தி.மு.க.,வை காட்டி கொடுத்த காங்.,

அவர் சொன்னது எங்களை அல்ல; தி.மு.க.,வை காட்டி கொடுத்த காங்.,

த.வெ.க., தலைவர் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மன்னர் ஆட்சி குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சொன்னது, எங்களுக்கு பொருந்தாது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. சமீபத்தில் மதுரையில் த.வெ.க., மாநாடு நடந்தது. அக்கட்சியின் தலைவர் விஜய், தி.மு.க.,வை விமர்சிக்கும் வகையில் பேசினார். அப்போது, ''மன்னர் ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்,'' என்றார். இது குறித்து, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ''ஒரு நிலைப்பாட்டை எடுத்து, அதில் விஜய் உறுதியாக நிற்க வேண்டும். மன்னர் ஆட்சி என பேசும் விஜய், அது குறித்து பேச வேண்டும் என்றால், முதலில் காங்கிரஸ் குறித்து தான் பேச வேண்டும். ''நேரு, அடுத்ததாக அவருடைய மகள் குறித்து தான் பேசி இருக்க வேண்டும். அவர் ஏன் பேசவில்லை? ஒரு குடும்பத்தில் பிறந்த காரணத்தால் பதவி என்றால், முதலில் காங்கிரசை தான் ஒழிக்க வேண்டும்,'' என்றார். சீமான் பேச்சுக்கு, தமிழக காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர் ரமேஷ்குமார் வெளியிட்ட அறிக்கை: மன்னர் ஆட்சியை எதிர்க்க வேண்டும் என்று பேசிய விஜயை விமர்சிக்கும் வகையில் பேசிய சீமான், 'அப்படியென்றால், முதலில் காங்கிரசை தான் எதிர்க்க வேண்டும்' என, என்ன புரிதலுடன் பேசுகிறார் என தெரியவில்லை. அரசியல் தெளிவின்றி அவர் பேசுவதையே இது காட்டுகிறது. மன்னர் ஆட்சியுடன் காங்கிரசை ஒப்பிடுகிறார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை தெரிந்து அவர் பேச வேண்டும். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவியை, தமிழகத்தைச் சேர்ந்த காமராஜர் அலங்கரித்து இருக்கிறார். இந்த வரலாற்றை சீமான் மறைத்துவிட்டு பேசுகிறார்; இல்லை, மறந்துவிட்டு பேசுகிறார். நாட்டின் பிரதமரை அடையாளம் காட்டும் அளவிற்கு காமராஜர் புகழோடும், கட்சியில் செல்வாக்கோடும் இருந்தார். அப்படியென்றால், அது மன்னர் ஆட்சியா? கடந்த 2004, 2009ம் ஆண்டுகளில், இரு முறை பிரதமர் வாய்ப்பு மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டது. மன்னராட்சி என்றாலோ, குடும்ப ஆட்சி என்றாலோ, மன்மோகன் சிங் எப்படி பிரதமர் ஆகி இருக்க முடியும்? நேருவுக்கு பின், அவர்கள் குடும்பத்திற்கு வெளியே இருந்து, எத்தனையோ பேர் பிரதமர்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். லால்பகதுார் சாஸ்திரி, நரசிம்ம ராவ் என நீண்ட பட்டியலே போடலாம். நேரு குடும்பத்திற்கு வெளியே, அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களாக பலர் இருந்துள்ளனர்; தற்போது கார்கே இருக்கிறார். விஜயை கடுமையாக விமர்சித்து சீமான் பேசி வருகிறார். ஆனால், விஜய் தன் மாநாட்டில் சீமானை ஒரு பொருட்டாக நினைக்கவே இல்லை. அதனால் தான், சீமான் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதனால் மன சங்கடத்தில் இருக்கும் சீமான், விஜயை துாற்ற வேண்டும் என்பதற்காக, காங்கிரஸ் கட்சி மீது புழுதி வாரி வீசுகிறார். சீமான் தன்னிலை உணர்ந்து பேச வேண்டும்; இல்லாவிட்டால், காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு, அவரது நிலையை உணர்த்துவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. விஜய் பேசியது தி.மு.க.,வை தான். ஆனால், சீமான் சீண்டியது காங்கிரசை. காங்கிரசோ, விஜய் விமர்சனம் எங்களுக்கல்ல என்று கூறியிருப்பதன் வாயிலாக, 'விஜய் குறிப்பிட்டது தி.மு.க.,வை தான்' என மறைமுகமாக சுட்டிக் காட்டுவது போல் உள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

chinnamanibalan
ஆக 26, 2025 10:36

தேசிய அளவில் வாரிசு அரசியலை காங்கிரஸ் கட்சிதான் நடத்துகிறது. காங்கிரஸ் கட்சி தனது தலைவரையோ அல்லது நேரு குடும்பம் அல்லாதவர்களை பிரதமராக நியமனம் செய்தாலும், அதில் ஆதிக்கம் செலுத்துவது நேருவின் குடும்பம்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுபோல மாநில அளவில் கட்சித் தலைவர் மற்றும் ஆட்சியில் முதல்வர், துணை முதல்வர் பதவிகளை, திமுக வேறு யாருக்கும் வழங்குவது இல்லை. எனவே இந்தியாவில் மன்னராட்சி முறை பெயரளவில் ஒழிக்கப்பட்டு, மறைமுகமாக மன்னராட்சி முறை நடைமுறையில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை!


Surya krishna
ஆக 26, 2025 09:10

காங்கிரஸ் அடிமைகளுக்கு புரியவில்லை அவர்களும் வாரிசு அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். பெயருக்கு தலைவர் கார்கே முடிவுகள் எடுப்பதெல்லாம் யார் என்று நமக்கு தெரியாதா? அறிவிலிகள் என் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பீத்திக் கொண்டிருக்கிறார்கள்


velu
ஆக 26, 2025 08:39

There is no dirt on my face/mustachio even after fall down upside down in mud


Sun
ஆக 26, 2025 08:14

சீமான் பேசியது குறித்து காங்கிரஸ் காரர்களின் மறைமுக கோபம் நியாயம்தானே? மாநில அரசியல் செய்யும் அவர் வாரிசு அரசியல் குறித்து தி.மு.க வைத்தானே முதலில் நேரடியாக பேசி இருக்க வேண்டும்? கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, அழகிரி, உதயநிதி அடுத்து ரெடியாகும் இன்ப நிதி . சீமான் எப்படி தி.மு.கவை தாக்கி பேசுவார்? பேச மாட்டார்.அவர்தான் ஸ்டாலினை சந்தித்த பிறகு அவரது போக்கே மாறி விட்டதே?


பேசும் தமிழன்
ஆக 26, 2025 08:13

நீங்கள் என்ன தான் முட்டு கொடுத்தாலும் கான் கிராஸ் கட்சியில் நடப்பது மன்னராட்சி தான்... மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கு தலைவர் பதவி கொடுத்தாலும்.. அவரை கட்டுப்படுத்துவது.. நேரு குடும்ப ஆட்கள் தானே? நேரு.... இந்திரா.... ராஜீவ்.... சோனியா.. ராகுல்.... Etc... இதெல்லாம் வாரியாக தெரியவில்லையா ??


முக்கிய வீடியோ