உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மின் கட்டண சலுகை அளிக்க ஹோட்டல்கள் கோரிக்கை

மின் கட்டண சலுகை அளிக்க ஹோட்டல்கள் கோரிக்கை

சென்னை: ஹோட்டல்களுக்கு சமையல் காஸ் சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டதால், தமிழகத்தில் பல டீ கடைகள், சிறு உணவகங்கள் நேற்று முதல் மூடப்பட்டு வருகின்றன. இந்த விவ காரம் தொடர்பாக, தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று நடத்திய பேச்சில், 'மின் அடுப்புகளுக்கு மாறுவதற்கு ஏற்படும் செலவுகளை சமாளிக்க, மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும்' என, ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் எதிரொலியாக, ஹோட்டல்கள், தொழிற்சாலைகளுக்கு வணிக சிலிண்டர் வினியோகத்தை, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனங்கள், கடந்த 9ம் தேதி முதல் நிறுத்தியுள்ளன. இதனால், தமிழகத்தில் நேற்று முதல் பல டீ கடைகள், சிறிய உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன. நடுத்தர, பெரிய ஹோட்டல்கள், மின் அடுப்பு, விறகு அடுப்பு என, மாற்று எரிபொருளுக்கு மாறி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக, ஹோட்டல், தொழில் நிறுவனங்களின் கருத்துக்களை கேட்டறிய, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அரசு உயரதிகாரிகள், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில், எண்ணெய் நிறுவன அதிகாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில் துறையினர் உட்பட பலர் பங்கேற்றனர். சென்னை ஹோட்டல் சங்க தலைவர் ரவி கூறியதாவது: அமைச்சர் நடத்திய கூட்டத்தில், 'ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் கேட்கப்பட்டுள்ளது; அது கிடைத்ததும் சிலிண்டர் வினியோகம் சீராகும்' என, எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவித்தனர். ஹோட்டல்களில் மின் அடுப்புகள் பயன்படுத்தப்பட உள்ளன. இதனால், காலை, மாலையில் மின் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கப்படும், உச்ச நேர மின் பயன்பாட்டு கட்டணத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்தினோம். காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை, தனியார் நிறுவனங்களிடம் இருந்து, ஹோட்டல் உரிமையாளர்கள் நேரடியாக வாங்க அனுமதிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது: தமிழகத்தில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும் என்று, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார். வீட்டு காஸ் சிலிண்டர்களுக்கு, 25 நாட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும், வணிக சிலிண்டரை நிறுத்தி உள்ளதாகவும், எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவித்தனர். 'திருமணத்திற்கு பலர், ஆர்டர் கொடுத்துள்ளனர். எரிவாயு இல்லாததால் சமைக்க முடியவில்லை. உடனடியாக விறகு அடுப்பு பயன்படுத்த கட்டமைப்பு வசதி இல்லை. மின்சார அடுப்புகள் பயன்படுத்த வாய்ப்புள்ளது; அதற்கு அரசு சலுகை அளிக்க வேண்டும்' என்று ஹோட்டல் உரிமையாளர்கள் கேட்டனர். அவர்களின் கருத்துகள், முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும். ஹோட்டல் உரிமையாளர்களின் கோரிக்கைகளுக்கு அரசு உறுதுணையாக இருக்கும். சிலிண்டருக்கு பற்றாக்குறை வந்து விடுமோ என்ற அச்சத்தில், மக்கள் போட்டி போட்டு வாங்குகின்றனர். பெட்ரோலுக்கு தட்டுப்பாடு இல்லை என்று, எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மின் தேவை அதிகரிக்கும்

தமிழகத்தில் பெரும்பாலான ஹோட்டல்கள் சிலிண்டருக்கு மாற்றாக, 'இண்டக் ஷன் ஸ்டவ்' எனப்படும் மின்சாரத்தில் இயங்கும் அடுப்புகளை பயன்படுத்த துவங்கியுள்ளன. இதனால், மின் தேவை வழக்கத்தை விட கூடுதலாக அதிகரிக்கும் என, மின் வாரியம் மதிப்பீடு செய்துள்ளது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுவாக, 2,000 வாட்ஸ் அதாவது, 2 கிலோ வாட் திறன் உடைய, ஒரு மின் அடுப்பை பயன்படுத்தி சராசரியாக, ஐந்து பேருக்கு சமைக்க முடியும். ஒரு ஹோட்டலில், 500 நபர் சாப்பிடுவதாக இருந்தால் மின் அடுப்பின் திறன், 1,000 கிலோ வாட் அதாவது, 1 ஒரு மெகா வாட் என்றளவில் இருக்க வேண்டும். தாழ்வழுத்த பிரிவில், 51,360 ஹோட்டல்கள் இருந்தாலும், பாதி பேர் மட்டுமே மின் அடுப்பு பயன்படுத்த வாய்ப்புள்ளது. அதுவும், வாடிக்கையாளர்கள் வரும்போது மட்டுமே இயக்கப்படும். இதனால், மின் அடுப்பு பயன்பாட்டால் மின் தேவை, 500 மெகா வாட் வரை கூடுதலாக அதிகரிக்கும் என, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரமும் கிடைப்பதால், எந்த சிரமமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

காஸ் நிலையங்கள் மூடல்

ஆட்டோக்கள் அவதி சென்னை உட்பட பல மாவட்டங்களில் வாகனங்களுக்கு, சி.என்.ஜி., மையம் வாயிலாக, சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது. இதேபோல், எல்.பி.ஜி., காஸ் மையங்கள் வாயிலாக, வாகனங்களுக்கு எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது, எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சி.என்.ஜி., - எல்.பி.ஜி., நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதனால், எரிபொருள் கிடைக்காமல், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களை ஓட்டுவோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

நிக்கோல்தாம்சன்
மார் 12, 2026 22:13

எல்லாம் பிரீ ஆனால் கஸ்டமர்களுக்கு தலையில் டாக்கீயா தான்


Loganathan Kuttuva
மார் 12, 2026 20:51

solar water heater ,bio gas plant and solar panel elctrical energy installations will help to solve the problem.


Ram
மார் 12, 2026 19:15

எதற்காக கொடுக்கவேண்டும் சலுகை , ஒரு ருபாய் ரெண்டு ரூபாய்க்கு நீங்க சாப்பாடு கொடுக்குறீங்க , கோவிட timela வேலைய ஏத்துனாதா இறக்கவேயில்லையே


srinivasan
மார் 12, 2026 12:39

எதற்கு ஜிஎஸ்டி யில் 70000/ ஆயிரம் கோடி மோசடி செய்ததற்காக வா


சந்திரன்
மார் 12, 2026 12:28

அதுசரி இவ்ளோ நாள் வந்த வருமானத்தில் ஒரு பங்கை மின் வாரியத்திற்குதானே தந்தீங்க


Rathna
மார் 12, 2026 12:06

ஹோட்டல்கள் அடிக்கும் பகல் கொள்ளை அதிகம். 4 ரூபாய் தயாரிக்க ஆகும் காபி 20 ரூபாய். 10 ரூபாய் தயாரிக்க ஆகும் தோசை 60 ரூபாய் என கொள்ளை. இதிலே இலவசம் வேறயா?


jeyakumar
மார் 12, 2026 11:30

டாஸ்மாக் கடைகளுக்கும் டிஸ்கவுண்ட் குடுங்க சார்


Govi
மார் 12, 2026 11:25

புறக்கணிக்கவும் ஒரு டீ 50 ரூபாய பகல் கொள்ளை


chennai sivakumar
மார் 12, 2026 09:56

நீங்கள் பில்லிங் இல் கோல்மால் செய்வீர்கள். உங்களுக்கு வரி ஏற்ற வேண்டுமே தவிர குறைக்க கூடாது.


பாரதி
மார் 12, 2026 09:27

தினமும் 500 ரூபாய்க்கு சாராயம் குடிக்கும் ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் கொடுக்கப்படுவதால்... பணக்காரர்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு நான்கு மடங்கு செலுத்துவது கட்டாயம் ஆகிறது எனவே பணக்காரர்கள் தயவு செய்து ஏழைகளுக்கு தொடர்ந்து உதவி அளிக்க மின்சாரத்திற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும் நாங்கள் கொள்ளையடிக்க வந்த வெள்ளையன் எழுதிய சட்டத்திற்கு உட்பட்டு தான் நடக்கிறோம். நாங்கள் ஒன்றும் அந்த சட்டத்தை மீறி நடக்கவில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை