உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி எவ்வாறு நடக்கும்? தேர்தல் கமிஷன் விளக்கம்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி எவ்வாறு நடக்கும்? தேர்தல் கமிஷன் விளக்கம்

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடர்பான வழிகாட்டி கையேட்டை, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

ஒவ்வொரு தேர்தலுக்கு முன் அல்லது தேவைப்படும்போது வாக்காளர் பட்டியல் திருத்தப்பட வேண்டும். ஏற்கனவே, 1951 முதல் 2004ம் ஆண்டு வரை, எட்டு முறை சிறப்பு திருத்தப் பணிகள் நடந்துள்ளன. கடைசியாக, 2002 - 2004ம் ஆண்டு சிறப்பு திருத்தப்பணி நடந்தது. இதற்கிடையில், தொடர்ச்சியான இடமாற்றம், ஒரே வாக்காளர் பல இடங்களில் பதிவு, இறந்த வாக்காளர்கள் நீக்கப்படாதது, வெளிநாட்டவர்களின் தவறான சேர்ப்பு ஆகிய குறைகள் உள்ளன. இவற்றை சரிசெய்ய வேண்டியுள்ளது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், 1,200 வாக்காளர்கள் இருக்க வேண்டும். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்வதற்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், ஒரு வாக்கா ளர் பதிவு அலுவலர் நியமிக் கப்பட்டு உள்ளார். வரைவு வாக்காளர் பட்டியல் தயாரித்தல், கோரிக்கைகள் மீது முடிவெடுத்தல், இறுதி வாக்காளர் பட்டியலை தயாரித்து வெளியிடுதல், இவர்களின் பணி. ஒவ்வொரு வட்டத்திற்கும், ஒரு உதவி வாக்காளர் பதிவு அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் 27ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ள, ஒவ்வொரு வாக்காளருக்கும் தனித்துவமான கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடப்பட்டு உள்ளன. இந்த கணக்கெடுப்பு படிவங்களில், தற்போதைய வாக்காளர் பட்டியலில் உள்ள தேவையான விபரங்கள் இடம்பெற்று இருக்கும். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், தற்போதைய வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்களை, இன்று முதல் வழங்குவர். அதன்படி, வாக்காளர் அல்லது அவர்களது உறவினர் பெயரை, 2002 - 2004ம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலுடன் இணைத்து சரிபார்ப்பர். இதற்கான தகவல்களை சரிபார்ப்பதற்கு, இந்திய தேர்தல் ஆணையம், https://voters.eci.gov.inஎன்ற தரவு தளத்தை உருவாக்கியுள்ளது. கணக்கெடுப்பின்போது, புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோருபவர்களுக்கு, படிவம் 6 மற்றும் அதற்கான உறுதிமொழி படிவத்தையும், ஓட்டுச் சாவடி அலுவலர்கள் வழங்குவர். படிவத்தை நிரப்பவும், அவர்கள் உதவுவர். பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை, வாக்காளர் பதிவு அலுவலர் பெற்றுக் கொள்வார். இதற்காக, ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தது மூன்று முறை சென்று, இறந்தவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்களை கண்டறிவர். வாக்காளர்கள் குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்கள் அல்லது தற்காலிகமாக இடம் பெயர்ந்தவர்கள், இணைதயதளம் வாயிலாகவும் கணக்கெடுப்பு படிவத்தை நிரப்பலாம். கணக்கெடுப்பு படிவம் தவிர, வேறு எந்த ஆவணங்களும் கணக்கெடுப்பு காலத்தில் சமர்ப்பிக்க தேவையில்லை . கணக்கெடுப்பு படிவத்தில் வாக்காளரின் பெயர், அடையாள அட்டை எண், முகவரி ஆகியவை முன்பே அச்சிடப்பட்டு இருக்கும். வரிசை எண், பகுதி எண், பெயர், சட்டசபை, லோக்சபா தொகுதி பெயர், மாநிலம் ஆகிய விபரங்களும் அச்சிடப்பட்டு இருக்கும். கியூ. ஆர்., குறியீடும் இடம்பெற்று இருக்கும். பழைய புகைப்படம் முன்பே அச்சிடப்பட்டு இருக்கும். புதிய புகைப்படத்தை ஒட்டுவதற்கும் இடம் விடப்பட்டு இருக்கும். அனைத்து வாக்காளர்களும் தங்களது சமீபத்திய கலர் போட்டோவை ஒட்ட வேண்டும். இதை தொடர்ந்து, படிவத்தில் தங்களது பிறந்த தேதி, ஆதார் எண், மொபைல் போன் எண், தந்தை அல்லது பாதுகாவலர் பெயர், அவர்களது வாக்காளர் அடையாள அட்டை எண், தாயின் பெயர். தாயின் வாக்காளர் அடையாள அட்டை எண், கணவர், மனைவி பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட, கடந்த 2002 - 2004ம் ஆண்டு நடந்த சிறப்பு திருத்த பணியின்போது இருந்த விபரங்களை பதிவு செய்ய வேண்டும். புதிய வாக்காளர்கள் சேர்க்கைக்கு, படிவம் 6 மற்றும் உறுதிமொழி படிவத்தை நிரப்ப வேண்டும். அதே சட்டசபை தொகுதியை சேர்ந்த வாக்காளராக இருந்தால், நீக்கம் செய்வதற்கு படிவம் 7 நிரப்ப வேண்டும். திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பாக, படிவம் 8 பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும்? ''கணக்கெடுப்பு படிவத்துடன் வரும் ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம், அதை வாக்காளர்கள் இன்று பெற்றுக்கொள்ள வேண்டும்,'' என, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி கூறினார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை, இந்திய தேர்தல் ஆணையம் இன்று துவங்க உள்ளது. இதன் முதல் கட்டமாக, வாக்காளர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகளில், ஓட் டுச்சாவடி அலுவலர்கள், இன்று முதல் ஈடுபட உள்ளனர். இதற்காக, வீடு வீடாக வரும் ஓட்டுச்சாவடி அலுவலர்களை அணுகுவது தொடர்பாக, பல்வேறு கேள்விகள் வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளன. முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி அளித்த பேட்டி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் முதல் நாளான இன்று என்ன நடக்க போகிறது? கடந்த, 2002ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலுடன், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வாக்காளர்களின் வீடுகளுக்கு வருவர். இதற்கான பட்டியல், தேர்தல் கமிஷன் வாயிலாக, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொண்டு வரும் படிவத்தில், தொடர்புடைய வாக்காளரின் பெயர், முகவரி விபரம் இடம்பெற்று இருக்கும். அதை வாக்காளர்கள் வாங்கி கொள்ள வேண்டும். அந்த வாக்காளர், 2002ம் ஆண்டு அதே இடத்தில் வசித்திருந்தால், மற்ற விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அந்த வாக்காளர், தொகுதி அல்லது வீடு மாறி இருந்தால் என்ன செய்ய வேண்டும் ? ஒருவேளை, 2002ம் ஆண்டு வேறு ஒரு தொகுதியில், வேறு ஒரு இடத்தில், அந்த வாக்காளர் இருந்தால், அதை ஓட்டுச்சாவடி அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். ஓட்டுச்சாவடி அலுவலர், அந்த தொகுதியில், 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை பார்த்து, அவரது இருப்பை உறுதி செய்வார். அதன்பின், குடும்பத்தில் உள்ள மற்ற வாக்காளர்களின் விபரத்தை படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். ஓட்டுச்சாவடி அலுவலர் அடுத்தமுறை வரும்போது, மீண்டும் சமர்பிக்க வேண்டும். எத்தனை நாட்களில் கணக்கெடுப்பு பணி நிறைவு பெற வாய்ப்புள்ளது? ஒவ்வொரு ஓட்டுச்சா வடிக்கும், 1,200 வாக்காளர்கள் இருக்கும்படி, இந்திய தேர்தல் ஆணையம் வரையறை நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, கிராமங்களில் குறைந்தபட்சம், 250 வீடுகள் வரை இருக்கும். நகரப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில், மொத்தமாக பல வாக்காளர்கள் இருக்கவும் வாய்ப்புள்ளது. ஒரு நாளைக்கு, 40 முதல் 50 வீடுகளுக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்லும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஒரு வாரம் அல்லது, 10 நாட்களுக்குள் கணக்கெடுப்பு விண்ணப்பம் வினியோகம் செய்யும் பணிகள் நிறைவு பெறும். அடுத்தகட்ட சுற்றின்போது, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் கேட்கும் ஆவணங்களை, வாக்காளர்கள் வழங்க வேண்டும். படிவத்தை பூர்த்தி செய்வதில், ஏதாவது சந்தேகம் இருந்தால், அதற்கு தேவையான உதவிகளை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வழங்குவர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ