உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆதிச்சநல்லுார் கலாசாரத்தை நெருங்கும் திருமலாபுரம்: தொல்பொருள் ஆய்வில் தகவல்

ஆதிச்சநல்லுார் கலாசாரத்தை நெருங்கும் திருமலாபுரம்: தொல்பொருள் ஆய்வில் தகவல்

துாத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லுார், சிவகளை அகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருட்களுடன், தென்காசி மாவட்டம் திருமலாபுரத்தில் கிடைத்துள்ள தொல்பொருட்கள் ஒத்துப்போவதால், இரு இடங்களிலும் ஒரே கலாசாரம் உடைய மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம் என, கருதப்படுகிறது. துாத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லுார், சிவகளை உள்ளிட்ட தாமிரபரணி நதிக்கரையில் வாழ்ந்த, பழங்கால மக்களின் புதைப்பிடங்கள் மற்றும் வாழ்விடங்கள் அகழாய்வு செய்யப்பட்டுள்ளன. இரும்பு கருவிகள் அவற்றில், அதிகளவில் கருப்பு, சிவப்பு, கருப்பு - சிவப்பு மண்பாண்டங்கள், இரும்பு கருவிகள் மற்றும் மனிதர்களின் எலும்புகள் கிடைத்துள்ளன. மேலும், கலைநயம் மிக்க உயர்ரக செம்பு பாத்திரங்கள், சிறிதளவில் தங்க அணிகலன்கள் கிடைத்தன. இறந்தவர்களை புதைத்த ஈமத்தாழிகளில், நெற்கதிர், மலை, ஆமை, மான், பெண் போன்றவற்றின் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. ஆதிச்சநல்லுார் தொல்பொருட்கள் பொ.யு.மு., 2,500; சிவகளை தொல்பொருட்கள் பொ.யு.மு., 3,300 என, காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்காசி மாவட்டம் திருமலாபுரத்தில் முடிந்துள்ள, ஈமக்காட்டு அகழாய்விலும், அதேபோன்ற தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. முக்கியமாக, கருப்பு, சிவப்பு, கருப்பு - சிவப்பு வண்ணங்களில், ஒரே மாதிரியான வடிவில் மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. இங்கும் ஆதிச்சநல்லுார் தாழியில் உள்ளது போலவே ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இங்கு, கழுதை புலி, நரி, மனிதன், மலை முகடு, ஆமை உள்ளிட்டவை வரையப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லுாரில் உள்ளது போலவே வடிவியல் மாதிரிகளும் உள்ளன. இரும்பில் ஒற்றுமை ஆதிச்சநல்லுாரில் ஒரு ஈமத்தாழிக்கு அருகே, 6.25 அடி நீளமுள்ள இரும்பு ஈட்டி கிடைத்தது. அம்பு முனைகள், கத்திகள், கோடரிகள், உளிகள் உள்ளிட்ட கருவிகள் அதிகளவில் கிடைத்தன. பாதாள கரண்டி அமைப்பில், ஆறு பிரிவில் உள்ள, 'கொரண்டி' எனும் இரும்பு கருவியும் கிடைத்தது. திருமலாபுரத்திலும் அதிக அளவில் இரும்பு கருவிகள் கிடைத்துள்ளன. முக்கியமாக, 8 அடி நீளமுள்ள, இரும்பு ஈட்டி, நீளமான வாள், இரண்டு பட்டை பாதாள கரண்டி உள்ளிட்டவை கிடைத்து உள்ளன. ஆதிச்சநல்லுாரில், தங்கத்தால் ஆன ஒரு நெற்றிப்பட்டம்; திருமலாபுரத்தில் கழுத்தில் அணியும் சிறிய தங்க வளையம் கிடைத்து உள்ளது. மேலும், எலும்பால் ஆன கருவிகளும், மண்பாண்டத்தில் வெண்மை நிற கோடுகளில் அலங்காரம் செய்துள்ளதும், ஒரே மாதிரியாக உள்ளன. ஆனால், திருமலாபுரத்தில், புதிய கற்கால கருவிகளும் கிடைத்துள்ளன. இதனால், ஆதிச்சநல்லுார், சிவகளை உள்ளிட்ட தாமிரபரணி நதிக்கரை நாகரிகத்துக்கு சமகாலத்தில், திருமலாபுரத்தில் அதே கலாசாரத்தை பின்பற்றிய மக்கள் வாழ்ந்திருக்கலாம். அல்லது அதற்கு முந்தைய காலமான, புதிய கற்காலத்தில் இருந்தே, அங்கு மக்கள் வாழ்ந்திருக்கலாம். அதாவது, வரலாற்றில் குறிப்பிடுவது போல, புதிய கற்காலம், இரும்பு மற்றும் செம்பு பயன்பாட்டு காலம், எழுத்துகள் உருவாவதற்கு முந்தைய குறியீடுகள், ஓவியங்கள் அறிமுகமான வரலாற்று தொடக்க காலத்தில், இங்கு மக்கள் வாழ்ந்திருக்கலாம். அதன்படி, திருமலாபுரத்தில், 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து, 3,500 ஆண்டுகளுக்கு முன் வரை, மக்கள் வாழ்ந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் துல்லியமான காலக்கணிப்பை அறிய, மனித எலும்புகள், சடங்கு கலையங்களில் கிடைத்துள்ள உணவு துகள்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அவற்றின் முடிவுகள் வரும்போது, அறிவியல்பூர்வமான தகவல்கள் வெளியாகும். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

M.Sam
அக் 10, 2025 20:02

ஆதிச்சநல்லூர் பற்றி பல தவறான கருத்துக்கள்திட்டமிட்டு பரப்பப்படுகின்றது HUKU காரணம் கீழடி ஆராய்ச்சி முடிவுகள் இதனை ஏற்காத கூட்டம் வீண் புரளியை கிளப்பி விட்டு கொன்டே தான் இருக்கும் உண்மை தோண்ட தோண்ட தான் தெரியும் என்பது சாங்கிக்கு தெரிய வாய்ப்பு இல்லை.


Sridhar
அக் 10, 2025 14:30

கீழடி யை விட மிக தொன்மையான இடம் போல இருக்கே இங்கே ஏன் திருட்டு கும்பல் கவனம் செலுத்த மறுக்குது? அங்க ஏதேனும் ஹிந்துமத கடவுள் வழிபாட்டு குறியீடுகள் உள்ளதோ?


naranam
அக் 10, 2025 10:41

ஐயோ தாங்கல பா இவுங்க அலப்பறை! முதலில் கீழடி பற்றி மத்திய அகழ்வாராய்ச்சி மையம் கேட்டுள்ள கேள்விகளுக்கு சரியான பதிலை அனுப்புங்க ஸார்!


Kannan
அக் 10, 2025 07:47

Archeologists find


சமீபத்திய செய்தி