உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அறவழியில் போராடும் ஆசிரியர்கள் ஆடையை கிழித்து அடக்குமுறையா? தமிழக அரசுக்கு ஆசிரியர் பேரவை கண்டனம்

அறவழியில் போராடும் ஆசிரியர்கள் ஆடையை கிழித்து அடக்குமுறையா? தமிழக அரசுக்கு ஆசிரியர் பேரவை கண்டனம்

மதுரை: சென்னையில் சமவேலைக்கு சமஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி அறவழியில் போராடும் இடைநிலை ஆசிரியர்களின் ஆடையை கிழித்து போலீசார் மூலம் அடக்குமுறையை ஏவிவிடும் தி.மு.க., அரசுக்கு தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து மதுரையில் பேரவை மாநில தலைவர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது: தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான வாக்குறுதியை நான்கரை ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை. பாதிக்கப்பட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பலமுறை போராடியும் பயன் இல்லை. அவர்கள் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு, மாணவர்கள் கல்வி பாதிக்கக் கூடாது என்பதை கருதி விடுமுறையில் அறவழியில் போராட்டத்தை துவக்கியுள்ளனர். அவர்கள் மீது போலீசாரை கொண்டு அடக்குமுறையையும், வன்முறையையும் ஆளுங்கட்சி கட்டவிழ்த்து விடுகிறது. இதுதொடர்பான வீடியோ வைரலாகும் காட்சியில் ஆசிரியர்களின் ஆடைகளை கிழிக்கும் போலீசாரின் செயல் ஜனநாயக விரோதமானது. கடும் கண்டனத்துக்கு உரியது.இதுபோல் 2016, 2021 என 2 சட்டசபை தேர்தல்களின்போதும் தேர்தல் வாக்குறுதி தந்து விட்டு ஆட்சிகள் நிறைவடையும் போதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை களைய மூவர் குழு அமைத்தது. அதுவும் ஏமாற்று நாடகம் என அம்பலமாகி உள்ளது. ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்பு என்ற பெயரில் இந்த அரசு காலம் கடத்தியது. இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு கோரிக்கை நியாயமானது.தற்போதைய தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ், ஆசிரியர் சங்கங்களிடையே பாகுபாடு காட்டுகிறார். ஆசிரியர்களின் நலனுக்கு எதிராக செயல்படுகிறார். சம்பள முரண்பாட்டை களைய குழு அமைத்து, 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இயக்குநர் என்ற அடிப்படையில் அரசுக்கு உரிய கருத்துருவை வழங்காமல் காலம் தாழ்த்தியதும் கண்டிக்கத்தக்கது. அடக்குமுறையை கைவிட்டு இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் உடனே நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

subramanian
டிச 29, 2025 17:56

இது மனித உரிமை மீறல் இல்லையா? ஆடையை கிழிப்பது சட்டவிரோதம் இல்லை என்றால்? வேறு எது?


subramanian
டிச 29, 2025 17:54

முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு பொங்கி எழும் மனித உரிமை ஆணையம் இப்போது கல்லறைக்கு போய்விட்டதா?