சென்னை : ''தி.மு.க., கொண்டு வந்துள்ள கச்சத்தீவு மீட்பு தீர்மானம், மீனவர்களின் ஓட்டுகளை பெறுவதற்கான நாடகம்,'' என, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.கச்சத்தீவு மீட்கும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின், சட்டசபையில் இருந்து வெளியே வந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி நின்றனர். அதில், '18 ஆண்டுகள் மத்திய கூட்டணியில் அங்கம் வகித்தபோது, கச்சத்தீவை மீட்காமல் விட்டது ஏன்? கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தபோது கும்பகர்ண துாக்கம்; விடியா ஆட்சியின் பிரச்னைகளை மறைக்க நாடகமா என்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
பழனிசாமி அளித்த பேட்டி:
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, இந்திய எல்லைக்கு உட்பட்ட கச்சத்தீவு, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது, எம்.ஜி.ஆர்., கடுமையாக எதிர்த்தார். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் இருந்தது. அன்று முதல் இன்று வரை, தமிழக மீனவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். மத்தியில் கூட்டணியில் இருந்தபோது, இதற்கு தீர்வு காணவில்லை. இது குறித்து, சட்டசபையில் முழுமையாக பேச அனுமதி வழங்கவில்லை.அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வருகிறது. மீனவர்களின் ஓட்டுகளை பெற, தீர்மானம் நிறைவேற்றி, தி.மு.க., ஒரு நாடகத்தை அரங்கேற்றி உள்ளது. உண்மையிலேயே மீனவர்களுக்கு துரோகம் செய்தது, தி.மு.க., தான். நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவிட்டு, முடியும் நிலையில் கச்சத்தீவு தீர்மானம் கொண்டு வருகின்றனர்.தி.மு.க.,வில் 39 எம்.பி.,க்கள் இருக்கின்றனர். அவர்கள் ஏன் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை; பார்லிமென்டில் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை. மீனவர்கள் மீது தி.மு.க.,வுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதே மீட்டிருக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:
சீர்குலைந்து கிடக்கும் சட்டம் -- ஒழுங்கு, குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், அதிகரித்து வரும் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்முறைகள் என, தமிழகம் இதுவரை இல்லாத மோசமான இருண்ட காலத்தில் இருக்கும்போது, நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு என்று, நாடகமாடி கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவரது இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்பு தீர்மானம். இலங்கை அரசால், தமிழக மீனர்கள் தொடர் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு காரணம் ஸ்டாலினின் தந்தை கருணாநிதி, 1974ல் முதல்வராக இருந்தபோது, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசுடன் சேர்ந்து, கச்சத்தீவு மீதான உரிமையை விட்டு கொடுத்தது தான். 'கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது, மறைந்த இந்திராவின் ராஜதந்திரம்' என்று கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. தமிழக மீனவ மக்களுக்கு செய்த துரோகம், உங்களுக்கு ராஜதந்திரமா? கச்சத்தீவை விட்டு கொடுத்து, 50 ஆண்டுகள் மவுனமாக இருந்து, தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதிப்புக்கு உள்ளாக்கிவிட்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு மீட்போம் என்று, கபட நாடகம் ஆடும் ஸ்டாலினையோ, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியையோ, மக்கள் நம்ப போவதில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:
கச்சத்தீவை தாரை வார்த்த தி.மு.க.,வே, அதை மீட்க, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கையானது. மீனவர்களை அரசியல் பகடைக்காயாக பயன்படுத்தும், தி.மு.க., அரசுக்கு ஒட்டுமொத்த மீனவர்களும், தகுந்த பாடம் புகட்டுவர்.கச்சத்தீவை திரும்பப் பெற, முயற்சிகள் எடுக்கப்படும் என, தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதி அளித்த தி.மு.க., ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளில், தமிழக மீனவர்களை பாதுகாக்கவோ, கச்சத்தீவை மீட்கவோ, எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றுவது, ஒட்டுமொத்த மீனவர்களையும் ஏமாற்றும் செயலாகும். தி.மு.க., அரசு, தன் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க, தமிழக மீனவர்களை பகடைக்காயாக பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, மீதமுள்ள ஓராண்டில், கச்சத்தீவை மீட்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் பேச வேண்டும்!
கச்சத்தீவு விவகாரத்தை பொருத்தவரையில், மாநில அரசின் ஒப்புதல் பெறாமல், இலங்கைக்கு அது ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதல், தி.மு.க, எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறது. தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்னையை கையில் எடுத்து, தீர்வு காண வேண்டும் என்பதற்காக, கச்சத்தீவு மீட்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.தேர்தலுக்காக தீர்மானம் கொண்டு வரும் கட்சி, தி.மு.க., அல்ல. நான்கு நாள் பயணமாக பிரதமர் மோடி, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். அங்கு பல்வேறு விஷயங்கள் பேசப்படும் நிலையில், மீனவர்கள் பிரச்னையும் பேசப்பட இருக்கிறது. அப்படி பேசுகிறபோது, மீனவர்களின் நலனை காக்க கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினால், தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கலாம். பா.ஜ.,வும் இந்த தீர்மானத்தை ஆதரிப்பதால், பிரதமர் இலங்கைக்குச் சென்று, இது குறித்துப் பேசி, நிரந்தர தீர்வு ஏற்படுத்துவார் என நம்புகிறோம். -ரகுபதி, தமிழக சட்டத்துறை அமைச்சர்