உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ரோந்து செல்ல படகுகள் இல்லை: மீனவர்களிடம் கையேந்தும் போலீஸ்!

ரோந்து செல்ல படகுகள் இல்லை: மீனவர்களிடம் கையேந்தும் போலீஸ்!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில், கடற்கரை காவல் நிலைய போலீசாருக்கு ரோந்து படகுகள் இல்லாத நிலையில், அவசரத் தேவைக்கு மீனவர்களிடம் கையேந்தும் நிலை உள்ளது.

சோதனைச்சாவடி

கடலோர பாதுகாப்பை பலப்படுத்த, 1991ல் மத்திய அரசின் நிதி உதவியுடன், தமிழக அரசு கடலோர காவல் குழுமத்தை துவங்கி, கடற்கரை பகுதியில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணித்தது. தொடர்ந்து, 2011ல் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழக கடலோரப் பகுதிகளில், 42 கடற்கரை போலீஸ் ஸ்டேஷன்கள் துவக்கப்பட்டன.இங்கு பணிபுரியும் போலீசார் கடல்வழி ஊடுருவல், கடத்தல், கடலில் மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு காணுதல், கடற்கரை, சுற்றுலா தளங்களில் கூடும் மக்களை பாதுகாப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர்.ஒவ்வொரு கடற்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கும், ஜீப், டூ-வீலர்கள், வாக்கி டாக்கி, மணலில் அதிவேகமாக செல்லும் வாகனம், நவீன துப்பாக்கிகள் மற்றும் மாவட்டத்திற்கு இரு அதிவேக ரோந்து படகுகள் வழங்கப்பட்டன. ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் ஏழு கடற்கரை போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.இந்த ஸ்டேஷன்களின் ரோந்து பணிக்காக இரு அதிவேக இயந்திரப் படகுகள் வழங்கப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன், இரு படகுகளும் பழுதடைந்த நிலையில், நாகை, மயிலாடுதுறை என, மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டது.தற்போது, நாகை மாவட்டத்தில் மூன்று ஸ்டேஷன்களும், மயிலாடுதுறையில் நான்கு ஸ்டேஷன்களும் செயல்படுகின்றன. நாகை மாவட்டத்தில் இருந்த படகுகள் பழுதடைந்து துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய படகுகள் வழங்கப்படவில்லை.

அவசர தேவை

நான்கு ஆண்டுகளுக்கு முன் புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கும் ரோந்து படகுகள் வழங்கப்படவில்லை. இரு மாவட்டங்களிலும் ரோந்து படகுகள் இல்லாததால், போலீசார் ரோந்து பணியை செய்ய முடியாத அவலம் தொடர்கிறது.அவசர தேவைக்கு கடற்கரை போலீசார், மீனவர்களிடம் படகிற்காக கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களுக்கு தனியே இன்ஸ்பெக்டர்களை நியமித்து, ரோந்து படகுகளை வழங்க, கடலோரப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

சின்ன சுடலை ஈர வெங்காயம்
மார் 05, 2025 14:05

மயிலாடுதுறை அந்த(?) கலெக்டர் ஆட்சியில் நம்பர் 1 மாவட்டமாகி விட்டது என்று செய்தி வந்ததே. அது பொய்யா கோப்பால்..?


சின்ன சேலம் சிங்காரம்
மார் 05, 2025 13:23

மழைக்காக சென்னை corp vaangi வைத்திருக்கும் படகுகள் எல்லாம் சும்மா தானே இருக்கும்?


Petchi Muthu
மார் 05, 2025 13:03

போலீசார் நிலைமையை பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது கடும் நடவடிக்கை தேவை


முக்கிய வீடியோ