உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஒன்பது விடுதிகளுக்கு ஒரு காப்பாளர் நியமனம்: சமூகநீதி விடுதிகளில் பாதுகாப்பு கேள்விக்குறி

ஒன்பது விடுதிகளுக்கு ஒரு காப்பாளர் நியமனம்: சமூகநீதி விடுதிகளில் பாதுகாப்பு கேள்விக்குறி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும், ஒன்பது சமூக நீதி விடுதிகளுக்கு, ஒரே ஒரு காப்பாளர் நியமிக்கப்பட்டு இருப்பது, மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ், 1,331 விடுதிகள் செயல்படுகின்றன. இவற்றில், 65,000க்கும் அதிகமான, மாணவ, மாணவியர் தங்கி படிக்கின்றனர்.

ஆர்வமில்லை

பழைய கட்டடங்கள், தரமற்ற உணவு, சுகாதாரமற்ற கழிப்பறை போன்றவை காரணமாக, இவ்விடுதிகளில் தங்க, மாணவ, மாணவியர் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால், விடுதிகளில் சேர்ப்பதற்கு அரசு அனுமதி அளித்த, 98,000 மாணவர்களுக்கான இடங்களில், 30,000 இடங்கள் காலியாக உள்ளன.இவற்றை நிரப்ப, ஆதிதிராவிடர் நலத்துறை எந்த முயற்சியும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகிறது. பொதுவாக ஒவ்வொரு மாணவர் விடுதிக்கும், ஒரு தனி காப்பாளர் நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவள்ளுர் உள்ளிட்ட, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், ஒரே காப்பாளர் பல விடுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், விடுதி மாணவ, மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

வசதி தேவை

இதுகுறித்து, ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:மயிலாடுதுறை மாவட்டத்தில், மொத்தம், 19 விடுதிகள் உள்ளன. இதில் 2,000 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். இவ்விடுதிகள் அனைத்துக்கும் சேர்த்து, இரண்டு பெண் காப்பாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு உள்ளனர். வைத்தீஸ்வரன் கோவில், மாதானம், கொண்டல் பகுதிகளில் உள்ள, தலா இரண்டு விடுதிகள், மணல்மேடு, மங்கநல்லுார், மயிலாடுதுறையில் உள்ள தலா ஒரு விடுதி என, மொத்தம் ஒன்பது விடுதிக்கு காப்பாளராக, ஜோஸ்பின் சகாயராணி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். திருவெண்காடு மற்றும் தில்லையாடியில் தலா இரண்டு; தரங்கம்பாடி, சீர்காழி, கொள்ளிடம், ஆக்கூரில் தலா ஒரு விடுதி என, மொத்தம் எட்டு விடுதிகளுக்கு காப்பாளராக, ரேணுகாதேவி என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர்களால் ஒரே நாளில் அனைத்து விடுதிகளுக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், மாணவ, மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.அரசு விடுதி பெயர்களை, சமூக நீதி விடுதி என மாற்றினால் மட்டும் போதாது. விடுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். ஒவ்வொரு விடுதிக்கும் தனித்தனி காப்பாளர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆண் காப்பாளர்

பொதுவாக மாணவர்கள் விடுதிக்கு ஆண் காப்பாளரும், மாணவியர் விடுதிக்கு பெண் காப்பாளரும் நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில், ஒக்கூர் பகுதியில் செயல்படும், ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிக்கு, ஆண் காப்பாளரை நியமித்து அரசு உத்தரவிட்டிருப்பது, மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரிடம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்கு காப்பாளராக பெண் ஒருவரை நியமிக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

SANKAR
ஜூலை 21, 2025 12:11

image shows bedding is as good as IRCTC facilities in major junctions!


Mani . V
ஜூலை 21, 2025 03:46

அதெல்லாம் ஒரு கேள்விக்குறியும் இல்லை. நாங்கள் காரணத்துடன் தான் ஒன்பது விடுதிக்கு ஒரு காப்பாளரை நியமித்துள்ளோம். காப்பாளர் ஒரு விடுதியில் இருக்கும் பொழுது மற்ற எட்டு விடுதிக்கும் சாரும், ஞானசேகரன்களும் சுலபமாகச் சென்று வரத்தான் இந்த ஏற்பாடு. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது.


முக்கிய வீடியோ