உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / போலி சான்றிதழ்களை தடுக்க ஒரே நாடு; ஒரே தரவு தளம் : பல்கலை தேசிய அங்கீகார வாரிய தலைவர் தகவல்

போலி சான்றிதழ்களை தடுக்க ஒரே நாடு; ஒரே தரவு தளம் : பல்கலை தேசிய அங்கீகார வாரிய தலைவர் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''போலி சான்றிதழ் தயாரித்து, வேலை வாய்ப்பு பெறுவதை தடுக்கவும், தகுதியானவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கவும், ஒரே நாடு; ஒரே தரவு தளத்தால் தான் முடியும்,'' என, பல்கலைகளின் தேசிய அங்கீகார வாரிய தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்தார். அண்ணா பல்கலையின், 45வது பட்டமளிப்பு விழா, சென்னை கிண்டியில் நேற்று நடந்தது. தமிழக கவர்னர் ரவி, தங்கப்பதக்கம் பெற்ற 36 மாணவியர் உட்பட 68 பேருக்கும், முதல் மதிப்பெண் பெற்ற 503 மாணவர்களுக்கும் பட்டம் வழங்கினார்.சீர்திருத்தம்விழாவில், பிஎச்.டி., 435; எம்.எஸ்., ஒருவர்; முதுநிலை 20,319; இளநிலை 94,638 பேர் என, மொத்தம் ஒரு லட்சத்து 15,393 பேர் பட்டம் பெற்றனர்.உயர்கல்விக் துறை செயலர் கோபால், பல்கலை ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், பல்கலைகளின் தேசிய அங்கீகார வாரிய தலைவர் அனில் சஹஸ்ரபுதே பேசியதாவது: தற்போது, கல்வி உலக அளவில் சீர்திருத்தம் பெற்றுள்ளது. உலக அளவில் போட்டி அளிப்பதாகவும், வேலை வாய்ப்பு தரக்கூடியதாகவும் மாறியுள்ளது. எனவே, கல்வி தொடர்பாக, சர்வதேச அளவிலும், உள்நாட்டு அளவிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மத்திய அரசு, பல்வேறு விஷயங்களை உட்புகுத்தி, புதிய கல்வி கொள்கையை உருவாக்கியது.அதன் ஒரு பகுதியாக, தாய்மொழி கல்வியை வலியுறுத்தியது. அதை ஏற்று, இங்கு தமிழில் இன்ஜினியரிங் பாடம் கற்பிக்கப்படுவது மகிழ்ச்சி. தேசிய அளவில் உயர் கல்வி படிப்போர் விகிதத்தை, 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்குடன் செயல்படும் நிலையில், தமிழகம் 50 சதவீதத்தை கடந்து, உலக கல்வியுடன் போட்டியிடுகிறது.நம் நாடு, ஒன்பது ஆண்டுகளுக்கு முன், புதிய கண்டுபிடிப்புகளில், 81வது இடத்தில் இருந்தது; தற்போது, 39வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. விரைவில், 10வது இடத்துக்கு முன்னேறும். பொருளாதார வளர்ச்சிகடந்த 2014ல், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களின் எண்ணிக்கை 400 என்றிருந்த நிலையில், தற்போது, 300 மடங்கு அதிகரித்து, 1.25 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. உலகப் பொருளாதார வளர்ச்சியில், 10வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்துக்கு வந்துள்ளோம். விரைவில், மூன்றாம் இடத்திற்கு முன்னேறுவோம். உலக ஜி.டி.பி.,யில், இந்தியாவின் பங்களிப்பு, 33 சதவீதம். செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டி கல்வித் துறையில், மிகப்பெரிய அளவில் பங்களிக்கிறது.மாசு கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உலக வெப்பமயமாதல் போன்றவற்றுக்கு தீர்வாக, சூரிய சக்தி, காற்றாலை மின்சாரம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துகிறது. மேம்பாடுபல்கலை மற்றும் கல்லுாரி மாணவர்களின் தரவுகளை காக்கவும், போலிகளை தடுத்து, வேலை வாய்ப்பை உறுதி செய்யவும், தரவு வங்கியை மத்திய அரசு உருவாக்குகிறது. இந்த ஒரே நாடு; ஒரே தளவு தளமானது, 'ஆப்பார்' என்ற இணையதளத்தில், 12 இலக்க கடவுச் சொல்லுடன் இயங்கும். இதில், மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள், விளையாட்டு, கலை, கலாசார திறமைகள் உள்ளிட்ட பிற தகுதிகளை பதிவு செய்யலாம். அவற்றை, நாட்டின் எந்த மூலையில் உள்ள நிறுவனமும் பார்க்க முடியும். இதனால், தேசிய அளவில் கல்வி வாய்ப்பும், வேலை வாய்ப்பும் கிடைக்கும். கற்கவும், வேலை வாய்ப்புக்கும், இனி சான்றிதழ்களை எடுத்து செல்லத் தேவையில்லை. தற்போது பட்டம் பெற்றுள்ள நீங்கள் வேலைக்கு செல்லும் போது, நீங்கள் கற்றது பழையதாகி விடும். அதிலிருந்து விடுபட, தொடர் கல்வி கற்பது தான் ஒரே வழி. இணையதளத்தில் தொழில் நுட்ப வசதிகளுடன் மேம்பட்ட கல்வியை மத்திய அரசு வழங்குகிறது. அதை கற்று தங்களை மேம்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், பல்கலை பதிவாளர் பிரகாஷ், தேர்வு கட்டுப்பாட்டாளர் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அழைப்பிதழில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பெயர் இடம் பெற்ற நிலையில், அவர் வரவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

visu
அக் 28, 2024 19:05

நல்ல விஷயம் எல்லா சான்றிதழ்களையும் நேரடியாக இணையத்தில் பதிவேற்றி விட்டால் போலிகள் பிரச்சினையே வராது எதிர்கால இந்தியாவிற்கு மிக அவசியமானது கல்லூரிகள் நேரிடையாக பதிவு செய்யவேண்டும் திருத்தங்களுக்கு மத்திய கண்காணிப்பு இருக்க வேண்டும்


S Ramkumar
அக் 28, 2024 10:28

உடனே மாநில உரிமை பறிபோகிறது என்று கூப்பாடு வரும்.


Kasimani Baskaran
அக் 28, 2024 05:18

உயர் கல்வி அமைச்சர் விழாவை புறக்கணித்தது நல்ல காமடி.


சமீபத்திய செய்தி