விஜய் கட்சிக்கு மாறிய ஊராட்சி தலைவர் நீக்கம்?: நம்பிக்கை இல்லா தீர்மானம்
திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம், வண்டலுார் வட்டத்தில் அடங்கியது மாம்பாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள 6 வார்டுகளில், 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கடந்த 2021ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க.,வில் இருந்த வீராசாமி என்பவர் தலைவராக வெற்றி பெற்றார். துணைத்தலைவராக லோகேஸ்வரி என்பவர் உள்ளார். தேர்தலில் ஊராட்சி தலைவராக வெற்றி பெற்ற ஒரே மாதத்தில், அ.தி.மு.க.,விலிருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்து பணியாற்றி வந்தார்.இந்நிலையில், தலைவர், துணைத் தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர்களிடையே கருத்தொற்றுமை இல்லாமல், அடிப்படை பணிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனால், கடந்த 2021ம் ஆண்டு வார்டு கவுன்சிலர்களின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக செயல்படுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தெரிவித்து, துணைத் தலைவர் மற்றும் 1, 2, 5வது வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர் மீது மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். கலெக்டர் உத்தரவின்படி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் விசாரணை செய்து, கலெக்டரிடம் அறிக்கை அளித்தார்.இது தொடர்பான விசாரணையை அடுத்து, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் - 1994, பிரிவு 203ன்படி, ஊராட்சி தலைவர் வீராசாமி, துணைத்தலைவர் லோகேஸ்வரியின் காசோலை பயன்படுத்தும் அதிகாரத்தை, அப்போதைய செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், கடந்த ஆண்டு செப்., மாதம் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டர். பின், ஊராட்சி வங்கி கணக்குகள் பரிமாற்றம் செய்யும் அதிகாரம், பி.டி.ஓ., கட்டுப்பாட்டிற்கு சென்றது. காசோலை ரத்து தொடர்பாக, ஊராட்சி தலைவர் வீராசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இதற்கிடையில், ஊராட்சி தலைவர் வீராசாமி மீண்டும் தி.மு.க.,விலிருந்து விலகி, தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தார். இந்நிலையில், மேல்முறையீடு நடவடிக்கையாக, ஊராட்சி திட்ட பணிகள் பாதிக்கப்படுவதாக கூறி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன், துணைத் தலைவர் உள்ளிட்ட வார்டு கவுன்சிலர்கள் 6 பேர் சேர்ந்து, ஊராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, தற்போதைய கலெக்டர் அருண்ராஜியிடம் மனு அளித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி, கலெக்டர் வண்டலுார் தாசில்தார் புஷ்பலதாவிற்கு உத்தரவிட்டார்.அதன்படி, விசாரணை அதிகாரியான, வண்டலுார் தாசில்தார் புஷ்பலதா தலைமையில், மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாக சிறப்பு கூட்டம், நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதில், துணைத் தலைவர் உள்ளிட்ட 6 வார்டு கவுன்சிலர்களும் பங்கேற்று, ஊராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லை என, தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் கையெழுத்திட்டு வழங்கினர். இந்த நம்பிக்கை இல்லா தீர்மான அறிக்கையை, வண்டலுார் தாசில்தார் புஷ்பலதா, கலெக்டருக்கு அனுப்பி வைத்தார்.இதற்கிடையில், ஊராட்சி தலைவர் வீராசாமி, பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோருடன், திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். அவர், தி.மு.க.,விலிருந்து விலகி த.வெ.க.,வில் இணைந்ததால், ஆளுங்கட்சி தன் பதவியை பறிக்க முயற்சி செய்கிறது. இதுதொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்துள்ளேன். மேலும், கலெக்டர், முதல்வரிடம் புகார் மனு அளிக்க உள்ளேன் என, தெரிவித்தார். அவருடன் வந்த பொதுமக்கள், பி.டி.ஓ., பூமகள்தேவியிடம் மனு ஒன்றை அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது: மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் வீராசாமி மீது துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சேர்ந்து, பொய்யான புகார்களை அளித்துள்ளனர். தலைவரை பதவிநீக்கம் செய்ய மனு அளித்துள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை பதவி நீக்கம் செய்தால், பொதுமக்களாகிய நாங்கள் மறியல் செய்வோம். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து, பி.டி.ஓ., பூமகள்தேவியிடம் கேட்டபோது, “பெற்ற மனு கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், இதுகுறித்து நாங்கள் எந்த முடிவும் கூற இயலாது. இதற்கு விசாரணை அதிகாரியாக வண்டலுார் தாசில்தார் உள்ளார். தாசில்தாரின் விசாரணை அறிக்கை, கலெக்டரிடம் ஒப்படைக்கப்படும். அவர் எடுக்கும் முடிவே இறுதியானது,” என, தெரிவித்தார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
இதுகுறித்து, மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் வீராசாமி கூறியதாவது: மாம்பாக்கம் ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்களிடையே கருத்தொற்றுமை வரும் வரை, தற்காலிகமாக காசோலையில் கையெழுத்திடும் தகுதியை பறித்து, அதன் அதிகாரத்தை பி.டி.ஓ.,விடம் கலெக்டர் ஒப்படைத்தார்.நான் நிதி முறைகேடு செய்தேன் என, எந்த குற்றச்சாட்டும் உறுதிப்படுத்தப்படவில்லை. நான் தற்போது, தி.மு.க.,வில் இருந்து விலகி, தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து விட்டேன். அதனால், என் தலைவர் பதவியை பறிக்க வேண்டும் என, அரசியல் காழ்ப்புணர்ச்சியில், பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.நான் எந்த நிதி முறைகேடும் செய்யவில்லை. உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளபோது, நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்ற கூடாது.ஓராண்டாக காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் என்னிடம் இல்லை. என்னை போல், பிற தி.மு.க., கவுன்சிலர்களும் த.வெ.க.,வில் இணைந்திடுவர் என்ற பயத்தில், என் பதவியை பறிக்க முயற்சி எடுக்கப்படுகிறது.பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைத்திருந்தால், நான் தி.மு.க.,விலேயே இருந்திருப்பேன். பொய்யான புகாரை கூறி, என்னை அச்சுறுத்துகின்றனர். இது குறித்து, கலெக்டர், முதல்வரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.