உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு செக் வைக்க தேர்தல் கமிஷனில் மனு

ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு செக் வைக்க தேர்தல் கமிஷனில் மனு

'ராஜ்யசபா தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் எந்த ஒரு வேட்பாளரையும் அனுமதிக்கக்கூடாது. பழனிசாமி கையெழுத்திட்டு தரும் ஏ மற்றும் பி பார்ம்கள் ஏற்கப்பட்டால், அது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது' என்று வலியுறுத்தி, தலைமை தேர்தல் ஆணையத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வேட்புமனு தாக்கல்

தமிழகத்துக்கான ராஜ்யசபா தேர்தலில், வரும் ஜூன் 2ல் வேட்புமனு தாக்கல் துவங்க உள்ளது. ஜுன் 19ம் தேதி, ஓட்டுப்பதிவு நடைபெறும் என்றும், அன்றைய தினமே ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று தலைமை தேர்தல் ஆணையத்தில், தமிழகத்தில் இருந்து புதிதாக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுக்களால், திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகி புகழேந்தி சார்பில், தலைமை தேர்தல் ஆணையத்தில் தாக்கலாகி இருக்கும் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஏ மற்றும் பி படிவங்கள்

தமிழகத்தைச் சேர்ந்த ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவிக்காலம் முடியப் போவதால், அதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், கடந்த 2023 பிப்., 3ம் தேதி அன்று, இரட்டை இலை சின்னம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த தீர்ப்பின்படி, அப்போது நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்காக மட்டுமே, அ.தி.மு.க.,வுக்கு, இரட்டை இலை சின்னம் வழங்கப்படுவதாகவும், அதைத்தாண்டி, வேறு எந்தத் தேர்தலுக்கும், அந்த சின்னம் வழங்கப்படக்கூடாது என்றும், தெரிவிக்கப்பட்டிருந்தது.அதாவது, அந்த தேர்தலுக்கு பின், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலராக இருக்கும் அ.தி.மு.க.,வோ அல்லது வேறு எந்த அணியினரோ, அ.தி.மு.க., சார்பாக, ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்திட முடியாது. அவ்வாறு கையெழுத்திட்டால், அது செல்லாது. அதேபோல, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் கடந்த 2024, மார்ச் 15ம் தேதி, டில்லி ஐகோர்ட் அளித்த உத்தரவுகளின் அடிப்படையில், தலைமை தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடந்து வருகிறது.

உரிமை கிடையாது

எனவே, பழனிசாமி மட்டுமல்ல; அ.தி.மு.க.,வின் எந்த அணியினருக்குமே, ராஜ்யசபா தேர்தலுக்கான ஏ மற்றும் பி பார்ம்களில், அ.தி.மு.க.,வின் சார்பில் கையெழுத்துபோடுவதற்கும், உரிமை கிடையாது. இதனால், நடக்கவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் யாரையும் வேட்பாளர்களாக நிறுத்த முடியாது. மீறி நிறுத்தினால், தேர்தல் கமிஷன் அதை அனுமதிக்கக்கூடாது.எனவே, அ.தி.மு.க., பெயரில், பழனிசாமி கையெழுத்திட்டு ஏ மற்றும் பி படிவங்கள் கொடுத்தால், தேர்தல் ஆணையம் அதை ஏற்கக்கூடாது. இதற்கான அறிவுறுத்தலை, ராஜ்யசபா தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு, தலைமை தேர்தல் ஆணையம் வழங்கிட வேண்டும். விதிகள் மீறப்பட்டால், அது உச்ச நீதிமன்ற கண்டனத்துக்கு ஆளாக நேரிடும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.இதே கருத்துகளை வலியுறுத்தி, சூரியமூர்த்தி என்பவர் சார்பிலும், டில்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. - நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

N.Silambarasan
மே 30, 2025 01:29

Tha.vey.ka விஜய் சார்,காலை வணக்கம் . நீங்க முதல்வர் ஆகணும். அதற்கு கூட்டணி வலிமையாக அமைக்கணும். தா.vey.க+ தே.மு.தி.க + காங்கிரஸ்+ புரட்சி பாரதம் இணைந்தால் 2026 இல் வெற்றி உறுதி.


நல்லவன்
மே 28, 2025 15:37

அ.இ.அ.தி.மு.க வலிமையற்ற தலைமையாக உள்ளது. இயக்கம் பேரியக்கம். வலிமையான கட்டமைப்பு உள்ள இயக்கம் ADMK. ஆனால்ஸ்டாலினை எதிர்த்து களம் காணும் வலிமை எடப்பாடிக்கில்லை என்பது நிதர்சனம்... பாஜக துணையுடன் மேற்கு மற்றும் தெற்கில் சற்று வலிமையுடன் இருப்பது போல் தோன்றும். உண்மையில் இன்றைய நிலையில் திமுகவை வீழ்த்த கடுமையான உழைப்பு , ஆளும்சியான தலைமை தேவை ...


D Natarajan
மே 28, 2025 08:16

எல்லாம் பணம் படுத்தும் பாடு.


சாமானியன்
மே 28, 2025 06:30

நிறுவனர் எம்.ஜி.ஆர் ஏதேதோ காரணங்கட்காக அதிமுக கட்சி விதிகளை அமைத்தார். அது இந்த நேரத்தில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது. கட்சியில் உள்ளவர்களே கண்டபடி கேஸ் போடறாங்க. இந்த மாதிரி திமுகவிலோ, மற்ற கட்சிகளிலோ நடக்கவே நடக்காது. ராசிநாதனே ஆறாம் இடத்தில் இருப்பதால் தானோ ? பரிதாபம்.


Manaimaran
மே 28, 2025 05:26

சூரிய முத்தி இன்ன பிற கழை எடுக்கப வேண்டியவனுக


முக்கிய வீடியோ