சென்னை: சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக, 'டிட்டோ ஜாக்' அறிவித்திருந்த நிலையில், நேற்று முன்தினமே நுாற்றுக்கணக்கான நிர்வாகிகள், அவர்களின் வீடுகளிலேயே கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோ ஜாக், பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகத்தில் நேற்று, காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது. வெளியூர் நிர்வாகிகள் சென்னை வருவதை தடுக்கும் வகையில், நேற்று முன்தினம் இரவே, அவர்களை போலீசார் கைது செய்தனர். நுாற்றுக்கணக்கானோர், வீடுகளிலேயே கைது செய்யப்பட்ட நிலையில் பஸ்கள், ரயில்களிலும், நுாற்றுக்கணக்கான நிர்வாகிகள், சென்னை வந்து சேர்ந்தனர். அவர்களையும் ஆங்காங்கே போலீசார் கைது செய்தனர். அவற்றை மீறி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கூடினர். அங்கி ருந்து நுங்கம்பாக்கத்திற்கு பேரணியாக புறப்பட்டனர். போலீசார் விரைந்து வந்து அவர்களை கைது செய்தனர். டிட்டோ ஜாக் நிர்வாகிகள் 11 பேரை மட்டும், பள்ளிக்கல்வித் துறை செயலரை சந்திக்க, போலீசார் தலைமைச் செயலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்களின் கோரிக்கைகளை கேட்ட செயலர், அவற்றை துறை அமைச்சர் மற்றும் முதல்வரிடம் தெரிவிப்பதாக கூறினார். அதை கேட்டுக்கொண்ட நிர்வாகிகள், செயலர் பதிலுக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.
12ம் தேதி மறியல் நடத்த முடிவு
டிட்டோ ஜாக் அமைப்பின் உயர்மட்டக்குழு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் வரும் 12ம் தேதி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியலில் ஈடுபட போவதாக முடிவெடுக்கப்பட்டது.