பல்லடம் : 'சட்டசபையில், கள் குறித்து அமைச்சர் பொன்முடி பேசிய கருத்தை வாபஸ் பெற வேண்டும்' என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அதன் நிறுவனர் ஈசன் முருகசாமி, பல்லடத்தில் நேற்று கூறியதாவது:
கடந்த, 2 நாட்களுக்கு முன், தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது, நாங்குநேரி எம்.எல்.ஏ., ரூபி மனோகரன், கள் ஒரு மருத்துவ தன்மை கொண்டது என்றும், இதற்கான தடையை நீக்க வேண்டும் எனவும் பேசினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, 'கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே சாப்பிட அனுமதிக்கப்பட்டு வந்தது. மரத்திலிருந்து இறக்கும்போதே கலக்க வேண்டியதை கலந்து, அதை போதைப்பொருளாக மாற்றி விடுவர். இதையெல்லாம் கருத்தில் கொண்டே, பதநீர் இறக்குவதற்குக்கூட அனுமதி கொடுக்க யோசித்து வருகிறோம். பனைமரம் இருக்கும் பகுதியில் மட்டுமே, இந்த கோரிக்கை வந்த வகையில் இருக்கிறது' என்று பேசினார். இப்படி பேசி, கள் ஒரு கலப்பட பொருள் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவரது பேச்சு, தென்னை மற்றும் பனை விவசாயிகள், கள் போராட்டக்காரர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அறிவியல் பூர்வமற்ற, பகுத்தறிவற்ற, உண்மைக்கு முரணாக, கள் மீதான கருத்தை தெரிவித்த அமைச்சர் பொன்முடி, அவரது கருத்தை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிடில், அனைத்து விவசாயிகளையும் திரட்டி, வரும் சட்டசபை தேர்தலில், பொன்முடி போட்டியிடும் தொகுதியில், அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என பரப்புரை செய்து, தோற்கடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.