பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குறித்து, தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன், சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்துக்கு, பா.ம.க., தலைவர் அன்புமணி ஆதரவாளர்கள் பதிலடி கொடுக்க, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.கடலுார் மாவட்டம், மஞ்சக்கொல்லை கிராமத்தில், வன்முறை கும்பலால் இளைஞர்கள் சிலர் தாக்கப்பட்டனர். அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய, வன்னியர் சங்கத் தலைவருக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.அதற்கு வி.சி., தலைவர் திருமாவளவன், 'வி.சி., கொடிக் கம்பம், பீடத்தை உடைத்த வன்னியர் சங்கத்தினரை கைது செய்ய வேண்டும்' என வலியுறுத்தினார். மோதலில் ஈடுபட்ட பா.ம.க., மற்றும் வி.சி., கட்சியினர் மீது, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இந்நிலையில், வாழப்பாடி ராமசுகந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடலுாரில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் உருவானதற்கு, நடிகர் விஜய் ஆரம்பித்த கட்சி தான் காரணம். 'அக்கட்சிக்கு பின்னால் எவரும் செல்லக்கூடாது என்பதற்காக பா.ம.க., - வி.சி., ஆகிய இரு கட்சிகளும் ஜாதியை வைத்து அரசியல் செய்கின்றன' என, குறிப்பிட்டு இருந்தார்.சமூக வலைதளத்தில் அவரது பதிவு வெளியானதும், பா.ம.க.,வினர் கொந்தளித்தனர். அன்புமணி ஆதரவாளர்கள் அவரை வறுத்தெடுத்தனர். 'அவரது தந்தையும், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவருமான வாழப்பாடி ராமமூர்த்தி, வன்னியர் சங்கம் நடத்தி, ஜாதி அரசியல் செய்யவில்லையா' என, கேள்வி எழுப்பினர்.அதன் தொடர்ச்சியாக, ராமசுகந்தன் வெளியிட்டுஉள்ள மற்றொரு அறிக்கையில், 'ராமதாஸ் மற்றும் வன்னியர் சங்கத்தினர், வன்னிய இளைஞர்களை கலவரத்திற்கு துாண்டும் வகையில் உசுப்பேத்தி விடுவர். ஆனால், சுயநலத்திற்காக, குறிப்பிட்ட ஜாதித் தலைவர்களுடன் அவர்கள் கொஞ்சிக் குலாவுவர்' எனக் கூறியிருந்தார். அதைக் கண்ட அன்புமணி ஆதரவாளர்கள், சமூக வலைதளங்களில், 'ராமசுகந்தன் நீ வாழ உன் இனத்தைக் காட்டி கொடுக்காதே, அடக்கி வாசி' என பதிவிட்டனர். அதற்கு பதிலளித்து, ராமசுகந்தன் ஆதரவாளரும், தமிழக காங்கிரஸ் பேச்சாளருமான ரவி வெளியிட்டுள்ள அறிக்கை:வன்னியர் சமூகத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர் ராமதாஸ். தன்னை தவிர வேறு யாரும் சமூகத்தில் வளர்ந்து விடக்கூடாது என்பதில், கண்ணும் கருத்துமாக இருப்பவர். வாழப்பாடி ராமமூர்த்திதான், கருணாநிதியிடம் சொல்லி ராமசாமி படையாட்சிக்கு சிலை வைத்தார்.அவரது சிலைக்கு இன்று வரை ராமதாஸ் மரியாதை செலுத்தவில்லை.கடலுார் மாவட்டத்தில் உள்ள ராமசாமி படையாட்சி நினைவு மண்டபத்திற்கும் அவர் செல்லவில்லை. தன் சமூகத்தை சேர்ந்தவர்கள் எந்த கட்சியில் இருந்தாலும், அவர்களை திருமாவளவன் ஒருநாளும் விமர்சனம் செய்வதில்லை. அப்படியொரு நாகரிகத்துடன் நடந்து கொள்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - நமது நிருபர் -