புதுடில்லி: விமானப்படை தளங்களில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கண்ணீர் விட்டு கதறியதே, போர் நிறுத்தத்துக்கு முக்கிய காரணம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன. போர் நிறுத்தம் குறித்து, பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியதாவது: பயங்கரவாத முகாம்களை அழித்த பின், நம் ராணுவம் அமைதியாக இருந்த நிலையில், பாக்., ராணுவத்தினர் தாக்குதலை துவக்கியதால், அதற்கேற்றபடி தகுந்த பதிலடியை நம் படையினர் கொடுத்தனர்.முக்கியமாக, பாக்.,கின் விமானப்படை தளங்களை பெரிய அளவில் தாக்கி சேதப்படுத்தியதோடு முற்றிலும் முடக்கியதால், பாக்., பதறியது. மேலும் பதற்றம்
இதனால், மே 10ம் தேதி மதியம் 1:00 மணிக்கு 'ஹாட் லைன்' வாயிலாக இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரலை பாக்., தொடர்பு கொண்டது. ஆனால், அடுத்தடுத்த ராணுவ நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனை கூட்டங்களால் அவரிடம் பேச முடியவில்லை; பாக்., மேலும் பதற்றம் அடைந்தது. அதே நேரத்தில், நம் விமானப்படையினரின் தாக்குதல் உக்கிரமானது. பாக்.,கின் நீண்ட தொலைவு ஏவுகணைகள், ட்ரோன்களை அழித்து விட்டு, அவை எங்கிருந்து ஏவப்படுகிறதோ, அந்த விமானப்படை தளங்களையும் நிர்மூலமாக்கினர். கராச்சியில் அணு ஆயுத மையத்தின் அருகில் உள்ள இடத்திலும் இந்திய ராணுவம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் பாகிஸ்தான் தரப்பில் பீதி ஏற்பட்டது. இதையடுத்து, போரை நிறுத்த உதவும்படி, அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கண்ணீர் விட்டு கதறியது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ உடன் பாக்., ராணுவ தளபதி ஆசிம் முனிர் பேசினார். அதைத் தொடர்ந்து, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசிய மார்கோ ரூபியோ, 'தாக்குதலை நிறுத்துவதாக பாக்., கூறுகிறது. நீங்கள் தயாரா' என கேட்டுள்ளார். அவருக்கு பதிலளித்த ஜெய்சங்கர், 'பாகிஸ்தான் போரை நிறுத்த முன்வந்தால், இந்தியாவும் போரை நிறுத்தும்' என தெரிவித்தார். இந்த நிலையில், பாக்.,கில் இருந்து வந்த 'ஹாட் லைன்' அழைப்பு பற்றிய தகவலறிந்த நம் ராணுவ இயக்குநர் ஜெனரல், மாலை 3:35 மணிக்கு பாக்., தரப்பில் பேசினார். அப்போது, போர் நிறுத்தம் செய்வது என முடிவானது. அதன் தொடர்ச்சியாக, மே 10, மாலை 5:00 மணிக்கு நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, போர் நிறுத்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்த சூழலில் தான், அமெரிக்க அதிபர் டிரம்ப், 'இரவில் நடந்த நீண்ட பேச்சுக்கு பின், இரு நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டன,' என, எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். புரிந்துணர்வு
ஆனால், அந்த தகவலை வெளியிடும் முன், அவர், இந்தியாவிடம் எதுவும் பேசவில்லை; பாக்., உடன் எட்டப்பட்ட புரிந்துணர்வு பற்றியும் அவருக்கு தெரியாது. பாக்., விமானப்படை தளங்கள் அடுத்தடுத்து பலத்த சேதங்களை சந்தித்ததே, போர் நிறுத்தத்துக்கான முக்கிய காரணம். அமெரிக்கா உதவிய காரணத்தால் தான், போர் நிறுத்த அறிவிப்பு வெளியான பின், டிரம்புக்கு நன்றி தெரிவிப்பதாக பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் பல முறை கூறினார். அதே நேரத்தில், இந்தியா தரப்பில் வெளியான எந்தவொரு அறிவிப்பிலும் டிரம்ப் பெயரையோ, அமெரிக்காவையோ குறிப்பிடவில்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
டிரம்ப் வரவேற்பு
இரு நாடுகளின் போர் நிறுத்த முடிவை வரவேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், ''இந்த போர் நீடித்திருந்தால், ஏராளமான அப்பாவி மக்களும் உயிரிழக்க நேரிடும். இதை உணர்ந்து, தாக்குதலை நிறுத்த வேண்டிய தருணம் இது என்பதை முழுமையாக புரிந்து கொண்ட, இரு நாடுகளின் வலிமையான, மன உறுதி கொண்ட தலைவர்களைப் பார்த்து பெருமைப்படுகிறேன். ''ஆயிரம் ஆண்டுகளுக்கு பின், காஷ்மீர் பற்றிய ஒரு தீர்வை எட்டுவதற்காக உங்கள் இருவருடன் நானும் இணைந்து பணியாற்றுவேன். இந்தியா, பாக்., நாடுகளுடனான வர்த்தகத்தை அமெரிக்கா கணிசமாக அதிகரிக்கும்,'' என்றார்.