உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பழந்தமிழரின் அறிவுக் கருவூலம்; ஒரு கோடி ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் மயம்!

பழந்தமிழரின் அறிவுக் கருவூலம்; ஒரு கோடி ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் மயம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்புத்துார்:பழந்தமிழர்கள், தங்கள் இலக்கியம், வானவியல், மருத்துவம், வாழ்வியல் குறித்த தகவல்களை, ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துள்ளனர். இத்தகைய சுவடிகளுக்கு உரிய பராமரிப்பு இல்லையெனில், அவை செல்லரித்து விடும் அபாயம் உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி 2019 முதல் நடைபெறுகிறது. இதுவரை ஒரு கோடி ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் வடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.தமிழக தொல்லியல்துறையின் தமிழ் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு குழுமம் மூலம் மதுரை மண்டலத்தில் மட்டும் இதுவரை 2.5 லட்சம் பழமையான ஓலைச்சுவடிகள் பதப்படுத்தி, டிஜிட்டல் மயமாக்கியுள்ளனர். இது பற்றி தொல்லியல் துறையினர் கூறியதாவது: தமிழகத்தில் ஓலைச்சுவடிகள் எழுதுவது என்பது 350 லிருந்து 400 ஆண்டுகளுக்குள் ஏற்பட்ட வழக்கமாகும். இந்த சுவடிகள் அனைத்தும் தமிழ், கிரந்தம், தேவநாகரி எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது.எழுத்து ஒழுங்கிற்காக அந்த எழுத்துக்களில் புள்ளி,துணை எழுத்து,இரட்டைசசுழி கொம்பு போன்ற எழுத்துக்கள் இருக்காது. இதனால் இந்த எழுத்துக்கள் ‛கீறல்' என்றழைக்கப்படுகிறது.கல்வெட்டுக்கள், செப்புத்தகடுகளில் எழுதப்படுவது ‛கொத்து' எழுத்துக்கள் ஆகும்.இலக்கியங்கள்,புராணங்கள் மட்டுமின்றி வரவு செலவு கணக்கு,மருத்துவக்குறிப்பு எழுத சுவடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கணக்கு சுவடிகள் நீண்டதாகவும், இலக்கிய சுவடிகள் சிறிதாகவும், மருத்துவச்சுவடிகள் சிறியதாகவும் உள்ளது. ஓலைச்சுவடிகளை பாதுகாக்க நமது முன்னோர் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரதி எடுத்து பாதுகாத்தனர். சுவடிகளை அப்படியே பிரதி எடுப்பது மூலப்பிரதி. சுவடியில் உள்ள குறிப்பின் அர்த்தம் மாறாமல் எளிமையாக பிரதி எடுப்பது பிரதி எனப்பட்டது. தற்போது பிரதி எடுப்பது கடினமாகும் என்பதால் ஒலைகளை பதப்படுத்தி பாதுகாக்கின்றனர்.தமிழ்நாடு தொல்லியல்துறையில், மாநில சுவடிகள் குழுமத்தினர் தற்போது அனைத்து சுவடிகளையும் பதப்படுத்தி வருகின்றனர். தனியாரிடம் உள்ள ஓலைச்சுவடிகளையும் இலவசமாக பதப்படுத்தி கொடுக்கின்றனர். மேலும், சுவடிகளில் உள்ள பழமையான தகவல்களை டிஜிட்டல் மயமாக்குகின்றனர். அத்துடன் உரிமையாளர்களுக்கு சுவடிகளில் உள்ள தகவல்களை அச்சிட்டு கொடுக்கின்றனர்.மதுரை மண்டல சுவடி ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பு அலுவலகத்தினர் தற்போது மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மட்டும் 2.5 லட்சம் சுவடிகளை பதப்படுத்தி, டிஜிட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் ஒரு கோடி சுவடிகளுக்கும் மேலாக பதப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.ஓலைச்சுவடிகளை சுத்தம் செய்வது குறித்து மதுரை மண்டலத்தைச் சேர்ந்த வேல்முருகன், சாந்தகுமார் ஆகியோர் கூறுகையில்,‛முதலில் சுவடிகளில் உள்ள தூசி அகற்றப்படுகிறது. பின்னர் கருப்பு மை எழுத்துக்களில் தடவப்படுகிறது. பின்னர் லெமன்கிராஸ் எண்ணெய் சுவடி முழுவதும் தடவப்படும். அதில் சுவடிகள் பதப்படுத்தப்படுவதுடன் எழுத்துக்கள் கருப்பாக தெரியவரும். பின்னர் கேமிரா மூலம் சுவடிகள் போட்டோ எடுக்கப்படும். போட்டோ சென்னை அலுவலகம் அனுப்பப்பட்டு, டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது.சுவடிகளில் உள்ள தகவலும் படிக்கப்படுகிறது. சுமார் 10 ஆண்டுகள் வரை இது சுவடியை பாதுகாக்கும். இருப்பினும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுவடியை பராமரிக்க உரிமையாளருக்கு அறிவுறுத்தப்படும்.' என்றார். நேற்று செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியக ஓலைச்சுவடிகள் பராமரிப்பு பணிகள் நடந்தது. அருங்காட்சிய நிறுவனர் எஸ்எல்.எஸ்.பழனியப்பன் கூறுகையில், ‛எங்கள் வீடு ஓலைச்சுவடிகளை தமிழ்சுவடி பாதுகாப்பு மதுரை மண்டலக்குழுவினர் பராமரி்த்தனர். சிவகங்கை மாவட்டத்தில் அதிகமாக ஓலைச்சுவடிகள் உள்ளன. உ.வே.சாமிநாதய்யர் கொத்தமங்கலத்திலும், மிதிலைப்பட்டியிலும் தான் அதிகமாக சுவடிகளை சேகரித்தார். நகரத்தார் வீடுகளில் தொழில் கணக்கு, கோவில் கொடை, கப்பல் போக்குவரத்து செலவு, தமிழ் இலக்கியங்கள் குறித்த ஓலைச்சுவடிகள் பரவலாக உள்ளன. அவற்றை பராமரித்து பாதுகாக்க இது ஒரு வாய்ப்பு ஆகும். விருப்பமுள்ளவர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் கோ.சசிகலா செல்: 8838173385 மற்றும் 9944035740 ல் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ManiMurugan Murugan
செப் 12, 2025 23:57

பலங்காலத்தில் சாதிபேதமில்லை ஏற்படுத்தியவர்கள் ஆங்கிலேயர் என்பதற்கு வேலூர் புரட்சி சிறந்த எடுத்துக் காட்டு


ManiMurugan Murugan
செப் 12, 2025 23:54

அருமை வாழ்த்துக்கள் இருப்பினும் கருத்துக்கள் உண்மை நிலை மாறாது காக்க ப் பட வேண்டும் 20 ஆண்டு முன் படித்த கருத்துக்கள் மாற்றப்பட்டிள்ளது பல புத்தகங்களில் இது தவறு அதே ப் போல் சித்தர்கள் காலத்தில் மக்கள்தொகை குறைவு அன்று சாதி பேதமே கிடையாது ஆனால் சித்தர் பாடல்கள் என்ற தொகுப்பில் பல சாதி வேற்றுமை பாடல!்கள் உள்ளது இவையெல்லாம் சேர்க்கப்பட்ட வை யே இத்தகைய ஊடுருவல் பொய் தகவல் இல்லாது செயல்படுத்த வேண்டும் என்பதே எனது கோரிக்கை


c.mohanraj raj
செப் 12, 2025 19:46

அருமையான முயற்சி வாழ்த்துக்கள்


டி சங்கரநாராயணன் ஈரோடு
செப் 12, 2025 13:53

நல்லது தமிழர் அறிவுக் களஞ்சியம் காப்பாற்றப்பட வேண்டும்


புண்ணியகோடி
செப் 12, 2025 12:46

அருமை. இன்னும் நிறையப்பேர் வீடுகளில் பரண் மீதும், டிரங்குப்பெட்டிகளிலும் ஓலைச்சுவடிகளை வைத்திருக்கிறார்கள். விழிப்புணர்வு இல்லாமல் கரையானுக்கு இரையாக்குகிறார்கள். அவற்றை அரசாங்கம் வாங்கி பார்த்து ஆக வேண்டியதை டிஜிட்டடல் மயமாக்க வேண்டும்.


புதிய வீடியோ