உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மக்கள் பிரச்னைகளை தீர்க்கும் போலீசாரின் பிரச்னைகளை தீர்க்க ஆளில்லை

மக்கள் பிரச்னைகளை தீர்க்கும் போலீசாரின் பிரச்னைகளை தீர்க்க ஆளில்லை

கோவை : பொது மக்களின் பிரச்னைகளை சட்ட ரீதியாக அணுகி தீர்த்து வைக்கும் போலீசார் பணியில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர்.போலீஸ் பணி என்றாலே 24 மணி நேரம் பணி என்றாகிவிட்டது. தினமும், எந்நேரமும் பணிக்கு வர வேண்டும் என்ற வகையில் ஒவ்வொரு போலீசாரும் உள்ளனர். இதனால் பலர் மன உளைச்சல் அடைகின்றனர். பணிச்சுமையால் பல போலீசாருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது.இந்நிலையில், பணிச்சுமை காரணமாக போலீசாருக்கு வார விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் போலீசாரின் குடும்ப விழாக்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆரம்பத்தில் இதை அதிகாரிகள் பின்பற்றி, சுழற்சி முறையில் போலீசாருக்கு வார விடுமுறை அளித்து வந்தனர். பின்னர், சட்டம் ஒழுங்கு பிரச்னை, போலீஸ் பற்றாக்குறை காரணங்களால் பெரும்பாலான போலீஸ் ஸ்டேஷன்களில் வார விடுமுறை அளிப்பதை நிறுத்தினர்.இது தவிர, வாரத்தில் கிட்ட தட்ட சுமார் 90 மணி நேரம் வேலை செய்யும் நிலையில் பல போலீசார் உள்ளனர். இவையெல்லாம் போலீசாருக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.மேலும், வி.ஐ.பி.,க்கள் வருகை, அரசியல் கூட்டம் போன்ற நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்படும் போலீசாருக்கு சரியான நேரத்தில் உணவு, இயற்கை உபாதைகள் கழிக்க நேரம், இடம் உள்ளிட்டவை கிடைப்பதில்லை என வருந்துகின்றனர். கோவை மாநகரில் நடமாடும் கழிப்பறை வாகனங்கள் உள்ளன. ஆனால், அவற்றை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை என போலீசார் தெரிவிக்கின்றனர். பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருக்கும் போது, அந்த வாகனத்தை எடுத்துச்சென்றால் போலீசாருக்கு வசதியாக இருக்கும் என கூறுகின்றனர்.இது இல்லாமல், ஒவ்வொரு போலீசாரும் பணிநேரத்திலும், பணி முடிந்து வீட்டிற்கு சென்ற பிறகும் குடும்பத்தினரோடு நேரம் செலவிட முடியாத நிலையில் உள்ளனர். எப்போதுமே 'மீட்டிங்', பிரச்னை என அழைப்பு வருவதால் பலர் துாக்கம் கெட்டு உடல் நலம் பாதிக்கும் நிலையில் உள்ளனர்.இது தொடர்பாக போலீசார் சிலர் கூறியதாவது: தினசரி குறைந்தது 12 மணி நேரம் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. விடுப்பு இல்லாமல் வேலை செய்வதால் குடும்பத்தினருக்கு தேவையானதை செய்து தர முடியாமல் போகிறது. ஓய்வு நேரம் என்பதே இல்லாமல் போகிறது. அதுவே பெரிய மன உளைச்சலை தருகிறது. வார விடுப்பு அளிக்க வேண்டும் என்ற உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் பல போலீசார் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அன்பே சிவம்
ஜன 17, 2025 20:03

1). உண்மைதான். ஆட்கள் பற்றாக்குறை, போதுமான நிதி வழங்காதது மற்றும் போலீஸ் கைகள் கட்டப்பட்டு உள்ளது. 2). அதாவது 2026 ஆண்டுக்கு பிறகு இதை தீர்த்து வைக்க காவல் துறையில் பணிபுரிந்த திரு அண்ணாமலை அவர்கள் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார் என நம்புவோமாக.


சமீபத்திய செய்தி