உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சொத்துக்களை பிடுங்குவதற்காக வக்ப் சட்டம் கொண்டு வரவில்லை: நட்டா பேச்சு

சொத்துக்களை பிடுங்குவதற்காக வக்ப் சட்டம் கொண்டு வரவில்லை: நட்டா பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி, ஏப். 7-“வக்ப் சட்டத்தின் வாயிலாக, வக்ப் வாரியங்களின் சொத்துக்களை பிடுங்குவதோ, அதை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதோ அரசின் நோக்கம் இல்லை. சட்டத்துக்கு உட்பட்டு முறையான பலன்களை அளிப்பதே நோக்கம்,” என, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா குறிப்பிட்டார்.பா.ஜ.,வின், 46வது நிறுவன நாள், டில்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, கட்சித் தலைவரும், மத்திய சுகாதார அமைச்சருமான நட்டா பேசியதாவது:வக்ப் சட்டம் குறித்து பல தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். வக்ப் சொத்துக்களை அரசு பிடுங்கிக் கொள்ளும், தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடும் என்று, பொய் தகவல்களை பரப்பி வருகின்றனர்.

வேலைவாய்ப்பு

வக்ப் சொத்துக்களை பறித்துக் கொள்வது அரசின் நோக்கம் அல்ல. அந்த சொத்துக்களை சட்டத்துக்கு உட்பட்டு முறையாக பராமரித்து, முஸ்லிம் சமுதாயத்தினருக்கு கல்வி, மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம்.மேற்காசிய நாடான துருக்கி உட்பட பல முஸ்லிம் நாடுகளில், வக்ப் சொத்துக்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. நாங்கள் கூறுவது, சட்டத்துக்கு உட்பட்டு வக்ப் வாரியங்கள் செயல்பட்டு, முறையான பலன்கள் உரியவர்களுக்கு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்பது தான்.கடந்த 1951ல் பாரதிய ஜன சங்கமாக இருந்து, தன் அரசியல் பயணத்தை பா.ஜ., துவக்கியது. தற்போது உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக உள்ளது. பல மாநிலங்களிலும் ஆட்சியில் இருப்பதற்கு காரணம், தன் கொள்கைகளில் இருந்து பா.ஜ., எப்போதும் விலகியது இல்லை என்பதுதான்.கொள்கைகளை நீர்த்துப்போகச் செய்ததே, காங்கிரசின் சறுக்கல்களுக்கு காரணம். தற்போது, 240 லோக்சபா எம்.பி.,க்கள்; 98 ராஜ்யசபா எம்.பி.,க்கள், நாடு முழுதும், 1,600 எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ., வைத்துள்ளது. சமீபத்தில் உறுப்பினர் சேர்க்கை நடந்து முடிந்துள்ளது. இதன்படி, 13.5 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில், 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தீவிர களப்பணியாற்றுகின்றனர்.

விமர்சனம்

கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளும், பா.ஜ., மிகப்பெரிய கட்சி என்பதை ஒப்புக்கொள்கின்றன.நாடு தான் முதன்மை என்று, பா.ஜ., செயல்படுகிறது. நாட்டின் பாரம்பரியம், கலாசாரம், வரலாற்றை பேணி காக்கிறது. மற்ற கட்சிகளைப் போல, ஓட்டு வங்கிக்காக தாஜா அரசியல் செய்வதை பா.ஜ., விரும்பவில்லை.முஸ்லிம்கள் உட்பட அனைத்து மதத்தினருக்கும் அவர்களுக்கு உரிய உரிமைகள், பலன்கள் கிடைக்க வேண்டும் என்றே பா.ஜ., செயல்படுகிறது. குடியுரிமை திருத்த சட்டம், வக்ப் சட்டம், முத்தலாக் தடை சட்டம் என, இதற்கு பல உதாரணங்கள் உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.

மோடி பெருமிதம்!

கட்சியின் நிறுவன நாளையொட்டி, சமூக வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவு:நிறுவன நாளில் கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். கட்சிக்காக தங்களை அர்ப்பணித்தவர்களை இந்த நாளில் நினைவு கூர்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்காகவும், வளர்ந்த நாடு இலக்கை எட்டவும் இந்த நாளில் நம் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்வோம்.கட்சியின் சிறந்த நிர்வாகம் என்ற கொள்கையை, மக்கள் நேரடியாக பார்த்து வருகின்றனர். அதுவே, தேர்தல்களில் மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கு காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஏப் 07, 2025 12:47

பிடுங்கப்பட்ட, ஆட்டை போடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்காக வக்ப் சட்டத்திருத்தம்.


ஆரூர் ரங்
ஏப் 07, 2025 12:04

கோவில் நிலங்களை பிடுங்கி உழுதவர்களுக்கே அளிக்க வேண்டும் எனப் போராடும் கம்யூனிஸ்டு ஆட்கள் வக்ஃபு இடங்களை உழவர்கள் மற்றும் அங்கு குடியிருப்பவர்களுக்கே உரிமையாக்கவேண்டும் எனக் கேட்பதில்லை. மதத்துக்கு ஒரு சட்டம்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை