'நாடே துக்கம் அனுசரித்து வரும் நிலையில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்' என, பா.ஜ., குற்றச்சாட்டு வைக்க, 'தனிப்பட்ட முறையில் ராகுல் பயணம் செய்வதில் உங்களுக்கு என்ன பிரச்னை; புத்தாண்டிலாவது திருந்துங்கள்' என்று, காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை மையமாக வைத்து, இரு கட்சிகளுக்கும் இடையில் நடக்கும் 'வார்த்தைப் போர்' அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 26ல் காலமானார். இதைத் தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், ஏழு நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்தது. இதற்காக, நாடு முழுதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும், மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.இதையடுத்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்கள் அனைவரும் மன்மோகன் சிங்கின் இல்லத்திற்கு சென்று, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். டில்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் மன்மோகன் சிங் உடல் வைக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டு, அங்கிருந்து ராணுவ வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. நிகாம்போட் காட் என்ற இடத்தில் மன்மோகன் உடல் தகனம் செய்யப்பட்டது. குற்றச்சாட்டு
இருப்பினும், 'முன்னாள் பிரதமர் என்பதால் நினைவிடம் அமையும் இடத்திலேயே தகனம் செய்யாமல், பொது சுடுகாட்டில் தகனம் செய்ய வைத்ததன் வாயிலாக, மன்மோகன் சிங்கை பா.ஜ., இழிவுபடுத்திவிட்டது' என்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் வீசியது.'தகனம் நடந்த இடத்தில், மன்மோகன் சிங் குடும்பத்தாருக்கு முன்வரிசையில் இடம் தராமல் புறக்கணிக்கப்பட்டனர். செய்தி சேனல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, துார்தர்ஷன் மட்டும் நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. 'அதிலும், பிரதமர் மோடியை மட்டும் நீண்ட நேரம் காட்டிக்கொண்டிருந்தனர்' என, காங்கிரஸ் குற்றஞ்சாட்டி இருந்தது.இவை அனைத்தையும் மறுத்த பா.ஜ., 'மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க இடம் தேர்வு செய்து அறிவிக்கப்படும். முன்னாள் பிரதமரின் மறைவில் காங்கிரஸ் தேவையற்ற அரசியல் செய்கிறது' என, கூறியிருந்தது.மேலும், 'மன்மோகன் சிங்கின் அஸ்தியை வாங்குவதற்குக் கூட, அவரது உறவினர்களுடன் காங்கிரசார் எவரும் செல்லவில்லை. இதன் வாயிலாக மன்மோகன் சிங்கை அக்கட்சி எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்' என்று, பா.ஜ., குற்றம் சாட்டியிருந்தது.இதை மறுத்துள்ள காங்கிரஸ், 'தகனம் உள்ளிட்ட இறுதி மரியாதை நிகழ்ச்சிகளில், குடும்பத்தார் ஓரங்கட்டப்பட்டு நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தனர். 'மிகுந்த துக்கத்திலும் அவர்கள் இருப்பதால், அவர்களது தனிப்பட்ட உணர்வுகளுக்கு மரியாதை அளிக்கும் வகையில், அஸ்தி சேகரிப்புக்கு கட்சி சார்பில் யாரும் செல்லவில்லை' என்று விளக்கம் அளித்திருந்தது. வெட்கக்கேடானது
இந்த நிலையில் தான், புதிய பிரச்னை வெடித்துஉள்ளது. பா.ஜ.,வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியான அமித் மாள்வியா, 'முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்காக நாடே துக்கத்தில் இருக்கிறது. ஆனால், புத்தாண்டை கொண்டாடுவதற்காக ராகுல், வியட்நாமுக்கு பறந்து சென்றுள்ளார்.மன்மோகன் சிங்கின் மறைவை, அவர் தன் அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்திக் கொண்டார். ராகுலின் நடவடிக்கை, மன்மோகன் சிங்கை அவமதிப்பதாக உள்ளது.'சோனியா குடும்பத்தார் அனைவருமே சீக்கிய மக்களை எப்போதுமே வெறுத்து வந்துள்ளனர். இந்திரா மறைந்தபோது, இவர்கள் டில்லியில் நடத்திய வெறியாட்டத்தை ஒருபோதும் மறக்க முடியாது' என்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளார்.இதற்கு பதிலடியாக, காங்கிரஸ் மூத்த எம்.பி., மாணிக்கம் தாக்கூர் வெளியிட்டுள்ள செய்தியில், 'மன்மோகன் சிங் உடலை யமுனை நதிக்கரையில் தகனம் செய்வதற்கு, பா.ஜ., அமைச்சர்கள் அனுமதி தர மறுத்தது மிகவும் அவமானகரமானது. மன்மோகன் சிங் குடும்பத்தினரை, இவ்வாறு கடும் மன நெருக்கடிக்கு பா.ஜ., உள்ளாக்கியது வெட்கக்கேடானது.'ராகுல் தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், உங்களுக்கு என்ன பிரச்னை; நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? புத்தாண்டு பிறக்க உள்ளது; அப்போதாவது, நீங்கள் திருந்துங்கள்' என்று கூறியுள்ளார்.இவ்வாறு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைந்ததில் இருந்தே, அதையே மையமாக வைத்து இரு கட்சிகளுக்கும் இடையில் நடக்கும் 'வார்த்தைப் போர்' அடுத்தடுத்த கட்டங்களை எட்டி வருவதால், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராகுலிடம் இதை எதிர்பார்த்தோம்!
பா.ஜ., செய்தித்தொடர்பாளர் ஷெஷாத் பூனாவாலா கூறியதாவது: 'ராகுல், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர். ஆனால், அந்த பதவியின் அர்த்தத்தையே அவர் மாற்றிவிட்டார். தான் ஒரு சுற்றுலா பயணி போல் செயல்படுகிறார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்காக நாடு துக்கம் அனுசரிக்கும் நிலையில், ராகுல் சுற்றுலா பயணம் கிளம்பி விட்டார். இது ஆச்சரியத்தை அளிக்கவில்லை; எதிர்பார்த்ததுதான்.இதற்கு முன், மும்பை நகரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, நாடே பதற்றத்தில் இருந்தது. அந்த சமயத்திலும், இரவுநேர கேளிக்கை விருந்துகளில் ராகுல் பங்கேற்றார். மன்மோகன் சிங் மறைவுக்காக அவர் கவலையோ, துக்கமோ படப்போவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.- நமது டில்லி நிருபர் -