புதிய அமைச்சராக கோவி செழியன் பதவி ஏற்றிருக்கிறார். ஆனால், தமிழக மக்களுக்கு சொல்லப்படும் செய்தி, நம்மை வருத்தப்படச் செய்கிறது. குறிப்பாக, திருமாவளவனுடைய கருத்து. திருமாவளவன், 'தமிழ்நாடு அரசியலில் இது முதல்முறையாக நிகழ்ந்த ஒன்று என பலரும் வியப்போடு பாராட்டுகின்றனர். நீண்ட காலமாக இந்தக் குறை பட்டியல் சமூகத்திற்கு உண்டு. 'மக்கள்தொகையில் கணிசமாக இருக்கும் ஒரு சமூகப் பிரிவினர் இவர்கள். இவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அமைச்சரவையில் இல்லையே என்ற விமர்சனம் நீண்ட காலமாக இருந்து வந்தது. இன்றைக்கு முதலமைச்சர் அவர்கள் உயர்கல்வித் துறையை பட்டியல் சமூகத்தைச் சார்ந்த ஒரு உறுப்பினருக்கு வழங்கி இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. 'அனைத்து ஜனநாயக சக்திகளும் இதை வரவேற்றுப் பாராட்டுகின்றன. கூட்டணிக் கட்சி என்ற முறையில் விடுதலை சிறுத்தைகளும் வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்' என்று கூறி இருக்கிறார்.திருமாவளவன் பேசி முடிக்கும்வரை, அவர் முகத்தில் எந்த சந்தோஷமும் இல்லை. வழக்கம்போல பொய்க்கதைகளையும் அவிழ்த்து விட்டிருக்கிறார். கர்மவீரர் காமராஜர்
தமிழ்நாடு அரசியலில் இது முதல் முறையாக நடந்த ஒன்று என திருமாவளவன் எதை சொல்ல வருகிறார்? உயர்கல்வித் துறை என்ற வகையில் வேண்டுமானால் இது முதல் முறையாக இருக்கலாம். ஆனால், பட்டியலின மக்களுக்கு வலுவான துறைகளை கொடுத்து அவர்களின் திறமைக்கு மதிப்பளித்தவர் என்றால், அது கர்மவீரர் காமராஜரையே சேரும்.அவரது முதல் அமைச்சரவையில், பரமேஸ்வரன் என்ற அமைச்சர் இருந்தார். அவருக்கு அறநிலையத்துறை, பத்திரப்பதிவு, கலால் மற்றும் மது ஒழிப்பு துறைகளை வழங்கினார். இவை அனைத்தையும் அவர், திறம்பட நிர்வாகம் செய்தார். ஆனால் திராவிடங்களும், அதன் கூட்டணிகளும் அவரைப் பற்றிப் பேசும்போது, ஹரிஜன மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தார் என்று மட்டுமே, தமிழக மக்களுக்கு சொல்லி வருகின்றனர். இன்னுமொரு கூடுதல் செய்தி, பரமேஸ்வரன், ரெட்டமலை சீனிவாசனின் பேரன். காமராஜர் அதற்காக அவரை மந்திரி ஆக்கவில்லை. மாநிலக் கல்லுாரியில் பட்டம் பெற்றவர். சென்னை மாநகர மேயராக இருந்தவர். மதுராந்தகம் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றார் என்பதற்காக, அதாவது அவரது தகுதிக்காக, ஐந்து துறைகளை பெருந்தலைவர் கொடுத்தார்.காமராஜர் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தபோது, மற்றுமொரு புதுமையைச் சாதித்துக் காட்டினார். லுார்தம்மாள் சைமன் என்ற பெண்மணியை அமைச்சராக்கினார். இவர் முக்குவர் என்னும் மீனவக் குடியில் பிறந்தவர். காமராஜர் இவரைத் தேர்ந்தெடுத்தமைக்குக் காரணம் அவரது ஜாதி அல்ல. அந்தக் காலத்திலேயே லுார்தம்மாள் உலகம் சுற்றிய பெண்மணி. லுார்தம்மாள் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தபோது, மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், 1959ல் வெள்ளிக்கெண்டை மீனை சீனாவிலிருந்தும், புற்களை விரும்பிச் சாப்பிடும் புல்கெண்டை மீனை, ஜப்பானிலிருந்தும் இறக்குமதி செய்தார். இதன்வழியாக கெண்டை ரக மீன் வளர்ப்பைத் தமிழகம் முழுதும் விவசாயிகள் மத்தியில் பரவலாக்கினார். இன்று ரசாயன உரங்கள் வந்த பிறகு, வயல்களில் மீன் வளர்ப்பது அழிந்தே விட்டது.லுார்தம்மாள் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற காலகட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் ஏட்டளவில் மட்டுமே இருந்தன. இதை மாற்ற 1958ல் லுார்தம்மாளின் முயற்சியால், 'தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம்' உருவாக்கப்பட்டது. அதன்படி, அதிகாரம் படைத்த மாவட்ட ஆட்சிக்குழு முற்றிலுமாகக் கலைக்கப்பட்டு கிராமம், ஒன்றியம் என்ற அளவில் பஞ்சாயத்துக்களின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. பெண்களை நியமன உறுப்பினர்களாக நியமித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டது.காமராஜரின் மூன்றாவது அமைச்சரவையில், போற்றுதலுக்குரிய கக்கனை போலீஸ் மந்திரியாக்கி, இருவரும் தமிழகத்தில் வரலாறு படைத்ததை நாடறியும். ஆனால், இவை எதுவுமே மக்களிடம் நல்லமுறையில் சென்றடையக் கூடாது என்பதில், திராவிடக் கட்சிகளை விட திருமாவளவன் ஒருபடி முன்னே நிற்கிறார். எப்படி?கோவி செழியனின் தகுதி என்ன? ஒரு ஜாதியில் பிறந்து மட்டும்தானா? அவர் கும்பகோணத்தில் இளங்கலை முடித்துவிட்டு சென்னை சட்டக் கல்லுாரியில் சட்டம் படித்து பட்டம் பெற்றவர் என்று திருமாவளவன் ஏன் கூறவில்லை? அதன்பின் எம்.ஏ., தமிழ் மற்றும் எம்.ஏ., சமூகவியல் பட்டம் பெற்றவர் என்பதை திருமாவளவன் ஏன் சொல்லவில்லை? மேலும், அவர் கருணாநிதி பற்றி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றவர் என்பதையும், திருமாவளவன் ஏன் கூறவில்லை? அதுமட்டுமல்லாமல், 2011ல் நடைபெற்ற சட்டசபை தேர்தல் என்னும் ஆடிக்காற்றில், அம்மிகளே பறந்தபோது, 394 ஓட்டு வித்தியாசத்தில், கோவி வென்றார். இன்று மிகப்பெரிய அமைச்சர்கள் என்று வலம் வரும், நேரு, பொன்முடி போன்றோர், அந்த தேர்தலில், படுதோல்வி அடைந்தனர் என்பதையாவது திருமாவளவன் சொல்லியிருக்கலாம். அடுத்த தேர்தலில், 534 ஓட்டு வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றார். சொற்ப வாக்கு வித்தியாசம் என்றால், சற்றே தேர்தல் பணியில் சுணக்கம் காட்டினாலும், தொகுதி கைமாறி விடும். அந்த அளவுக்கு, கோவி செழியன் வேலை செய்திருக்கிறார் என்று பொருள். இதையாவது திருமாவளவன் சொல்லி இருக்கலாம். எப்படி சொல்வார்?
தி.மு.க.,வை நம்பித்தான் திருமாவளவனின் தேர்தல் வெற்றி தோல்வி என்று இருக்கும் நிலையில், சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றவர் செழியன். தனக்குத்தான் துணை முதலமைச்சர் பதவி என்று கசியவிட்ட மாத்திரத்தில் தி.மு.க., கோவியை தனக்கு எதிரான துருப்புச்சீட்டாக பயன்படுத்துகின்றனரோ என்ற அச்சம், திருமாவளவனுக்கு வந்துவிட்டது போல் தெரிகிறது. அதனால்தான், உளப்பூர்வமாக கோவி செழியனை சாதனை சொல்லி பாராட்ட முடியாமல், கூட்டணி தர்மத்திற்காக, ஜாதியை மட்டும் சொல்லி பாராட்டி முடித்திருக்கிறார்.