வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஏதாவது அவிங்க கண்டு பிடிச்சா இங்கே பிரிச்சு மேயுவாங்க... சுயமா ஒண்ணும்.கிடையாது.
நம்முடைய டேட்டாவை பயன்படுத்திக் கொள்வதற்கு AI நிறுவனங்களிடம் நாம் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும்
புதுடில்லி: இந்தியா, உலக அளவில் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நுகர்வோராக மாறி வருகிறது. ஏ.ஐ., என்ற சொல் காதில் விழாத இடமில்லை. அண்மையில் டில்லியில், 'ஏ.ஐ., இம்பேக்ட்' மாநாடு, இந்தியாவின் ஏ.ஐ., தொழில்நுட்ப வாய்ப்புகளை உலகுக்கு பறைசாற்றியிருக்கிறது. இந்நேரத்தில் இன்னொரு கேள்வி எழுகிறது: உண்மையிலேயே நாம் இத்தொழில்நுட்பத்தில் ஒரு நட்சத்திரமாக உருவெடுக்கிறோமா? அல்லது சர்வதேச ஏ.ஐ., ஜாம்பவான்களுக்கு தரவுகளை தாரை வார்த்துக்கொண்டிருக்கிறோமா? இக்கேள்விக்கு விடை சொல்ல வேண்டுமானால், ஏ.ஐ தொழில்நுட்பத்தின் அடித்தளமான 3 அம்சங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அவை: திறமை, கணித்திறன் (உயர் வேக சிப்புகள் மற்றும் இதர கட்டமைப்புகள்), தரவுகள். நம் இளைஞர்களிடம் திறமைக்குப் பஞ்சமில்லை. ஆனால், அடிப்படை நிலையில் ஆய்வுக்கான பயிற்சி கிடைப்பதில்லை என்பதும்; பொது பயன்பாட்டுக்கான ஆய்வகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நவீன பிராசஸர்கள் இல்லை என்பதும்தான் யதார்த்தம். நம்மிடம் 'தரவு' எனும் வியூக ரீதியிலான சொத்து இருக்கிறது. அதனை இலவசமாக ஏற்றுமதி செய்யாமல், எப்படி நமது வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது என்று பார்க்க வேண்டும். இந்தியாவில் கிட்டத்தட்ட 100 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். 'ஓப்பன் ஏ.ஐ., சாட் ஜி.பி.டி., ஆந்த்ரோபிக் கிளாடு' முதலிய உரையாடல் வழி செயற்கை நுண்ணறிவு தளங்களைப் பயன்படுத்துவதில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக இரண்டாமிடத்தை இந்தியா வகிக்கிறது. இது தவிர, தினமும் செய்திகள், குரல் பதிவுகள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் என்று ஏகப்பட்ட தரவுகளை உருவாக்கிவருகிறோம். அவற்றைக் குறிவைத்தே அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கு விரைகின்றன. ஏ.ஐ., தளங்களின் வருவாயில் இந்தியாவின் பங்கு குறைவு தான். ஆனால், ஏ.ஐ., அமைப்புகளைப் பயிற்றுவிக்க, இந்திய சந்தை முக்கியமானதாக இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், தரவு எனும் கச்சாப் பொருள்களை நம்மிடமிருந்து பெற்றுக்கொண்டு, முழுமைபெற்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அதிக விலை கொடுத்து வாங்கப் போகிறோமா? அதாவது, கடந்த காலம் திரும்பப்போகிறதா? இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதுதான், இந்தியாவின் 'மொழி வளம்'. 20க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வ மொழிகள்; நுாற்றுக்கணக்கான எண்ணிக்கையில் அதிகாரப்பூர்வமற்ற மொழிகள், பேச்சு வழக்கில் மட்டும் புழங்கும் மொழிகள், வட்டார வழக்குகள் என்று மொழிகளின் களஞ்சியமாக இந்தியா திகழ்கிறது. ஏ.ஐ., மாதிரிகளுக்கு இவற்றைக் கற்றுக்கொடுத்தபிறகு அவை தவறாகப் புரிந்துகொண்டால் வகுப்பறைகள், மருத்துவமனைகள் மற்றும் நீதிமன்றங்களில் புழங்கும் மொழிகளில் குழப்பம் ஏற்படும் அபாயம் உண்டு. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், ஆங்கிலம் பேசும் மக்களுக்கானதாக மட்டும் சுருங்கிவிடக் கூடாது. ஏ.ஐ.யின் பயன்கள் எளிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற, பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சமீபத்திய குரல் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. நமது தரவுகள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்ற பார்வை நமக்கு வேண்டும். தரவு சேகரிப்பு முறைகள் உலகளவில் சுரண்டல் தன்மையுடன் இருப்பதை மறுக்க இயலாது. எனவே, நாம் வாரி வழங்கும் தரவுகளுக்கு பதிலாக, நாம் எத்தகைய பயனைப் பெறுகிறோம் என்பது முக்கியம். தரவுக்கான கொள்கைகளை உருவாக்குவது அதைவிட முக்கியம். இதுவரை இந்தியா, 'கொடுத்திருக்கிறது'. இனியாவது நாம் விழித்துக்கொண்டு 'பெற' தயாராக வேண்டும்.
ஏதாவது அவிங்க கண்டு பிடிச்சா இங்கே பிரிச்சு மேயுவாங்க... சுயமா ஒண்ணும்.கிடையாது.
நம்முடைய டேட்டாவை பயன்படுத்திக் கொள்வதற்கு AI நிறுவனங்களிடம் நாம் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும்