சினிமா படப்பிடிப்பில் விஜய் பிசியாக இருப்பதால், த.வெ.க.,வில் கடும் குழப்பங்கள் நிலவுவதாக கட்சியினர் கூறுகின்றனர். துவங்கி ஓராண்டாக பெரிய செயல்பாடுகள் இன்றி முடங்கிக் கிடப்பதாக, விஜய் கட்சியினர் புலம்புகின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன், விக்கிரவாண்டியில் மிகப் பெரிய மாநாட்டை நடத்திய விஜய், தமிழக அரசியலில் பெரிய ஆர்வம் இன்றி ஒதுங்கி இருப்பது, கட்சியின் தொண்டர்களை சோர்வடைய வைத்திருக்கிறது. இதனால், கட்சிக்கு உயிரூட்டம் கொடுக்க வேண்டும் என்பதற்காக, விஜய்க்கு அவருடைய ரசிகர் மக்கள் மன்றத்தைச் சேர்ந்தோர் தொடர்ந்து கடிதம் எழுதினர். இதையடுத்து, புதிய மா.செ.,க்களை நியமிப்பதற்காக கூட்டம் ஒன்றை நடத்துமாறு, பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்துக்கு உத்தரவிட்டார் விஜய். இந்நிலையில், பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்துக்கும், கட்சியின் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமிக்கும் இடையே ஏற்பட்ட பனிப்போரை தொடர்ந்து, மா.செ.,க்களை நியமிப்பதற்கான கூட்டத்தை நேற்று முன்தினம் கூட்டியிருந்தார் ஆனந்த். சென்னை, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு தமிழகம் முழுதிலும் இருந்து பொறுப்புகளை எதிர்பார்த்து காத்திருப்போர் வந்தனர். கூட்டத்தில், 'ஏற்கனவே மாவட்ட பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்ட விஜய் மக்கள் நற்பணி மன்றத்தைச் சேர்ந்தோர் எவரையும் மாற்ற வேண்டாம்; புதிதாக மாவட்டங்களை பிரித்து, அவற்றுக்கு மட்டும் நிர்வாகிகள் நியமித்துக் கொள்ளலாம்' என, புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை கூறியுள்ளார். அதன்படி மாவட்டப் பொறுப்புக்கு ஆட்களை தேர்வு செய்வதாக கூறியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, சிலர் கூட்டத்தை விட்டே வெளியேறி உள்ளனர். துாத்துக்குடியில் கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்ட அஜிதா அக்னல், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சிலர், புஸ்ஸி ஆனந்த் நடவடிக்கைக்கு எதிராக கொந்தளித்து, தங்கள் கருத்தை ஆவேசமாக வெளிப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து, நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:விஜய் நேரடியாக களம் இறங்கும் வரை, கட்சியில் குழப்பங்கள் நீடிக்கத்தான் செய்யும். அவருடைய கடைசி படத்துக்கான படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது; ஏப்ரல் வரை நீடிக்கும். அதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் அவர், அதுவரை கட்சியை வழிநடத்தும் பொறுப்பை, புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளார். இருவருக்கும் இடையே ஈகோ யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. கட்சியின் செயல்பாடுகள் மந்தமாக இருப்பதாக, சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இதற்கு காரணம், ஜான் ஆரோக்கியசாமி தான் என முடிவெடுத்த புஸ்ஸி ஆனந்த் தரப்பினர், விஜய் குறித்து ஜான் பேசிய தொலைபேசி உரையாடல் பதிவை வெளியிட்டனர். இதனால், கட்சி இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. இதற்கிடையில், தன்னுடைய செயல்பாடுகள் வேகமாக இருக்கிறது என காட்ட, மா.செ.,க்கள் நியமனத்துக்கான ஆலோசனை கூட்டத்தை, புஸ்ஸி ஆனந்த் அவசரமாக நடத்தியுள்ளார். இது விஜய் சம்மதமின்றி நடந்ததாக கூறப்படுவதால், கட்சியினர் குழப்பம் அடைந்துள்ளனர். நடிப்புக்கு முழுக்கு போட்டு, அரசியல் களத்துக்கு விஜய் எப்போது வருவார் என காத்திருக்கிறது கட்சி. இவ்வாறு அவர்கள் கூறினர் - நமது நிருபர் -.