மருந்துகடை புகார்களை தெரிவிப்பது எங்கே? முறைகேடுகள் அதிகரிப்பு
கோவை: மருத்துவர் பரிந்துரைக்காமல், மருந்தாளுநர் மேற்பார்வையின்றி, ஊசி, மாத்திரைகள் விற்கக்கூடாதென விதிமுறை இருக்கும் பட்சத்தில், அதுசார்ந்த புகார்களை எங்கு முறையிடுவது என்ற வழிகாட்டுதல் இல்லை என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கோவை மாவட்டத்தில், கிட்டத்தட்ட 2,500க்கும் மேற்பட்ட மெடிக்கல் ஷாப்கள், மொத்த, சில்லறை மருந்து விற்பனையில் ஈடுபடுகின்றன. சான்றிதழ் பெற்ற மருந்தாளுநர் மேற்பார்வையில் தான், மருந்துகள் வழங்க வேண்டுமென்ற விதிமுறை உள்ளது. மெடிக்கல் ஷாப் உரிமையாளர்கள் மருந்தாளுனராக இல்லாத பட்சத்தில், சில இடங்களில், மருந்துகளை வழங்குகின்றனர். இது சட்டப்படி தவறு என்றாலும் பொதுமக்களுக்கு யார் மருந்தாளுனர், யார் உரிமையாளர் என தெரியாது. உரிய கல்வித்தகுதி இல்லாதவர்கள், மாற்றி மருந்துகளை கொடுக்கும் பட்சத்தில், அதன் பின்விளைவுகள் மோசமாக மாறும் அபாயம் உள்ளது. ஆனால், இதுபோன்ற புகார்களை மக்கள் தெரிவிக்கும் வகையில், மருந்து கட்டுப்பாடு இயக்குனரகத்தில், மாநில அளவிலான தொடர்பு எண்கள் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. சமீபத்தில் ஒண்டிப்புதுார், சூர்யா நகரில் செயல்படும் ராம்ஸ் மெடிக்கல் ஷாப்பில், மருந்தாளுநர் மேற்பார்வை இல்லாமல், கடையின் உரிமையாளரே மருந்துகள் விநியோகித்தது மட்டுமல்லாமல், ஊசியும் போட்டதாக புகார் எழுந்தது. அங்கு சென்ற ஒருவர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்ட பிறகே இந்த முறைகேடு வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மண்டல மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் மாரிமுத்துவிடம் இது குறித்து கேட்டோம். அவர் கூறியதாவது கோவை மாவட்டத்தில், 7 மருந்து ஆய்வாளர்கள் இருக்கின்றனர். மெடிக்கல் ஷாப்பில் என்னென்ன மருந்து விற்கப்படுகிறது, அதற்கான ரசீது, பதிவு விவரங்களை தொடர்ந்து ஆய்வு செய்கிறோம். தடை செய்யப்பட்ட அல்லது கருக்கலைப்பு போன்ற மருந்துகள் விற்பது தெரிய வந்தால், மருந்தாளுனர் உரிமம் தடை செய்வது, சஸ்பெண்ட் செய்வது, வழக்கு தொடுப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கிறோம். இதுசார்ந்த புகார்கள் இருப்பின், மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் செயல்படும் மண்டல மருந்து கட்டுப்பாடு அலுவலகத்தில் நேரிலோ, 0422 222 3350 என்ற எண்ணிலோ தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
மாநில அளவில் புகார் எண் தேவை
சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், 'மத்திய அரசு தடை செய்த சில காம்பினேஷன் மருந்துகள் மெடிக்கல் ஷாப்பில் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகளை பார்க்கிறோம். இதை பறிமுதல் செய்யும் முன்பு வரை சாப்பிட்டவர்கள் நிலை என்பது கேள்விக்குறிதானே. இதுசார்ந்த புகார்களை பதிவு செய்ய பிரத்யேக தொடர்பு எண்கள் இல்லை. அரசு அலுவலகங்களை தேடிப்போய் மக்கள் முறையிட முடியுமா? அரசு அலுவலக நேரத்திற்கு பிறகு, லேண்ட்லைன் எண்ணை அழைக்க முடியுமா? ஆகவே, மாவட்ட அல்லது மாநில அளவில் பிரத்யேக தொடர்பு எண் உருவாக்குவது அவசியம். இது குறித்து பொதுவெளியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதும் அவசியம்' என்றனர்.