உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / துாய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு; நகர்ப்புற உள்ளாட்சிகளில் தாமதம் ஏன்?

துாய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு; நகர்ப்புற உள்ளாட்சிகளில் தாமதம் ஏன்?

துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை, சென்னையை தொடர்ந்து மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகளில் துவங்க, நிதி பற்றாக்குறை தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தில் பணியாற்றிய, 2,000 துாய்மை பணியாளர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒப்பந்தம்

துாய்மை பணியாளர்கள் போராட்டங்களால் ஏற்பட்ட அதிருப்தியை சமாளிக்க, சென்னையில் உள்ள 31,373 துாய்மை பணியாளர்களுக்கு தினக்கூலி 585 ரூபாயில் இருந்து, 761 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மேலும், துாய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளையும் தினமும் இலவச உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இற்கான ஒப்பந்தம் தனியாருக்கு தரப்பட்டுள்ளது.அவர்கள், துாய்மை பணியாளர்கள் பணியாற்றும் இடத்திற்கே சென்று, தினசரி உணவு வழங்கி வருகின்றனர். இதற்கான திட்டத்தை சென்னையில், நவ., 15ல் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அப்போது அவர், 'சென்னையை போல் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளிலும் துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம், டிச., 6ல் துவக்கப்படும்' என்றார்.ஆனால், பல நகராட்சிகள் மற்றும் சில மாநகராட்சிகள், நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி இத்திட்டத்தை செயல்படுத்த தயக்கம் காட்டி வரும் தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம், இத்திட்டத்திற்கு தமிழக அரசு நிதியுதவி அளித்தால் செயல்படுத்த தயாராக இருப்பதாகவும் கூறுகின்றன.

இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாநகராட்சிகள், நகராட்சிகளில், அம்மா உணவகம் செயல்பாட்டில் இருந்தாலும், நஷ்டத்தில் தான் இயங்கி வருகின்றன. அம்மா உணவகத்தால், சென்னை மாநகராட்சியில் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது.

தயக்கம்

தற்போது, உணவு வழங்கும் திட்டமும் சென்னை மாநகராட்சிக்கு கூடுதல் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கூடுதல் சுமையாகிவிடக் கூடாது என, பிற நகர்ப்புற உள்ளாட்சிகள் தயக்கம் காட்டுகின்றன. சில நகர்ப்புற உள்ளாட்சிகளில், உணவுக்கு பதிலாக பணமாக தருமாறு, துாய்மை பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே தான், முதல்வர் சொன்ன தேதியில் இத்திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மழையே காரணம்

மழை காரணமாகத் தான், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தாமதமாகி உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. விரைவில், துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் துவக்கப்படும். - கார்த்திகேயன் நகராட்சி நிர்வாகத் துறை செயலர்- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பாரதி
டிச 12, 2025 15:36

அப்படியே அதே உணவை சட்டசபை நாட்களில் எம்எல்ஏக்கள் மந்திரிகளுக்கும் கொடுக்கலாம் அரசு கொடுக்கிறது என்றால் எப்படியும் தரமான உணவாக தானே இருக்கும் அவர்களும் சாப்பிடலாமே


தமிழ்செல்வன்
டிச 12, 2025 14:46

கையாலாகாத விளம்பர வேறு எப்படி செயல்படும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை