13 நாட்கள் பட்ஜெட் கூட்டத் தொடர் சபாநாயகர் செல்வம் தகவல்
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் நேற்று துவங்கியது. சட்டசபையை எத்தனை நாட்களுக்கு நடத்துவது தொடர்பாக அலுவல் ஆய்வுக்கூட்டம் சபாநாயகர் செல்வம் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு பின்பு சபாநாயகர் செல்வம் கூறியதாவது: சட்டசபை கூட்ட தொடரின் 2வது நாள், இன்று 11ம் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதமும், நாளை 12ம் தேதி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். வரும் 13ம் தேதி பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. அதன்பின் 3 நாட்கள் விடுமுறைக்கு பின் 17ம் தேதி சட்டசபை கூடி 21ம் தேதி வரை நடக்கிறது. சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஒட்டுமொத்மாக 13 நாட்கள் சட்டசபை நடக்கிறது. தட்டாஞ்சாவடியில் 13.50 ஏக்கரில் 3.45 ஏக்கரில் கட்டப்பட உள்ள புதிய சட்டசபை வளாகத்திற்கு ரூ. 657 கோடி மதிப்பில் திருத்தி அமைக்கப்பட்ட மதிப்பீடு நிதி அமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில், 110 கிமீ சாலை மேம்படுத்த ரூ.71 கோடி நிதி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் மத்திய அரசு திட்டங்கள் 1000 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மாநில அந்தஸ்து தொடர்பான 13 தீர்மானங்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்படவில்லை. என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்த பிறகே 2022ல் முதல் முறையாக மாநில அந்தஸ்து தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு மத்திய அரசு தற்போதைய நிலையே தொடரும் என தெரிவித்துவிட்டது. தீர்மானம் நிறைவேற்றினால் மாநில அந்தஸ்து தர வேண்டும் என்பது இல்லை. மாநில அந்தஸ்துக்கு அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.இவ்வாறு அவர் கூறினார்.