உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ.5 கோடி நில மோசடி வழக்கு முக்கிய குற்றவாளி கைது

ரூ.5 கோடி நில மோசடி வழக்கு முக்கிய குற்றவாளி கைது

புதுச்சேரி : ஒதியம்பட்டில் ரூ.5 கோடி நில மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான ரியல் எஸ்டேட் புரோக்கரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் சிவகாமி நகரை சேர்ந்தவர் பிரியா ( எ) பச்சையம்மாள். அ.தி.மு.க., பிரமுகர். இவர் கடந்த 1998ம் ஆண்டு, ஒதியம்பட்டில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 14,400 சதுர அடி இடத்தை தனது பெயரில் வாங்கினார். இவர் கடந்த 2001ம் ஆண்டு இறந்ததையறிந்த ஒரு கும்பல் ஆள்மாறாட்டம் செய்து, பிரியாவின் இடத்தை மனைகளாக பிரித்து விற்றனர். வில்லியனுார் சார் பதிவாளர் பாலமுருகன், புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தினர். அதில், வில்லியனுார் கணுவாப் பேட்டையை சேர்ந்த முனியன் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, நிலத்தை அபகரிக்க, மற்றொரு கும்பல் முயன்றனர். வாரிசு இல்லாத பச்சையம்மாள், பாலகிருஷ்ணன் தம்பதிக்கு, பிரகாஷ் என்ற மகன் உள்ளதாக ஒரு நபரை உருவாக்கினர். பிரகாஷ் பெயரில் போலி ஆதார் கார்டு, போலி முகவரி கொடுத்து, அசல் பத்திரங்கள் இல்லாமல், அப்போதைய சார் பதிவாளர் சிவசாமி உதவியுடன், பச்சையம்மாள் இடத்தை பத்திரப்பதிவு செய்தனர். அதே போலி ஆவணங்களை சமர்ப்பித்து, புதுச்சேரி கோர்ட்டில் வாரிசு சான்றிதழ் பெற்று, அதன் மூலம் பத்திரம் பெற்றனர். இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் மூலக்குளம் ஜெ.ஜெ நகர் ஜெனோ, 39; குயவர்பாளையம் சற்குணம், 39; கடலுார், செஞ்சி குமாரபுரம் ரவீந்திரநாத், 22; ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கில் முக்கிய நபராக செயல்பட்ட ரெட்டியார்பாளையம், மரியாள் நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் அந்தோணிசாமி, 60; என்பவரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.போலி பத்திர பதிவுகளில் தொடர்புடைய மேலும் சில குற்றவாளிகளை கைது செய்யவும், இரண்டு போலி பத்திரங்களையும் பதிந்த சார்பாதிவாளர் சிவசாமியை பிடிக்கவும், இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி