சைபர் குற்றங்களை தடுக்க கூடுதல் கவனம் தேவை
போலீசாருக்கு முதல்வர் வேண்டுகோள்புதுச்சேரி: புதுச்சேரியில் சைபர் கிரைம் மற்றும் போக்குவரத்து நெரிசல் பிரச்னை தீர்க்க, போலீசார் அதிக கவனம் செலுத்த வேண்டும் என, முதல்வர் ரங்கசாமி கேட்டுகொண்டார்.கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரியில், காவல் துறை சார்பில் நடந்த மக்கள் மன்றம் துவக்க விழாவில், அவர், பேசியதாவது:போலீசுக்கு தேவையான உதவிகளை செய்து, துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. போலீசில் காலி பணியிடங்கள் நிரப்பாமல், எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்போது அதை நீக்கி, போதுமான அளவுக்கு இருக்கும் நிலையை உருவாக்கி உள்ளோம். போலீஸ் இருந்தாலே குற்றம் செய்பவர்களுக்கு ஒரு அச்சம் இருக்கும். அது காவலர்களின் சீருடைக்கு கிடைக்கும் மரியாதை. இந்த நிலையால் குற்றம் குறைவது உண்மை. அதிக சைபர் குற்றங்கள் நடக்கிறது. பணம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், தினந்தோறும் பலர் பணத்தை இழந்து வருகின்றனர். அந்த குற்றங்கள் மீண்டும் நடக்காதபடி தடுக்க வேண்டும். அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.காவலர்கள் பயிற்சியின்போது, கற்றுதெரிந்ததை பணியில் பயன்படுத்த வேண்டும். புதுச்சேரியில் பொருளாதார நிலையில் வளர்ச்சி கண்டு வந்தாலும், போக்குவரத்துத்தில் நெருக்கடியான நிலை உள்ளது. இருக்கும் சாலைகளை வைத்து போக்குவரத்து ஒழுங்குப்படுத்துவது முக்கியம்.நகர பகுதி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த, போக்குவரத்து நன்கு தெரிந்த, நிபுணத்துவம் பெற்றவர்களிடம் பணியை ஒப்படைத்து, சரிசெய்ய வேண்டும். போலீசில் துவக்கியுள்ள மக்கள் மன்றம் அவசியமானது. இது பிரச்னைகளை தீர்ப்பதற்கான எளிய வழி. போலீஸ் சிறப்பாக பணியாற்றினால், மக்கள் துன்பங்களை குறைக்க முடியும். இவ்வாறு முதல்வர் பேசினார்.