பள்ளி திறப்பதற்கு முன் ஆசிரியர்கள் இடமாற்றம் கவர்னர், முதல்வருக்கு நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை
புதுச்சேரி: பள்ளி திறப்பதற்கு முன்பே ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என, நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார். அவர் கவர்னர், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: புதுச்சேரி கல்வித்துறையில் ஆசிரியர் டிரான்ஸ்பர் பாலிசி மூலம் நீண்ட காலம் ஒரே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். அதற்கான ஆயத்த பணிகள் நடைபெறுவதாக தெரியவில்லை. ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பதற்கு முன், ஆசிரயர்களை கல்வித்துறை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட பள்ளிக்கு நேரடியாக சென்று சேர்ந்து பணி செய்வார்கள். பள்ளிகள் துவங்கிய பின் பணியிட மாற்றம் செய்தால் புதிதாக இடமாற்றம் செய்யப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் சென்று சேர்ந்து பணிகளை தொடங்க காலதாமதம் ஏற்படும். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கும். கல்வித்துறை இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்காக புதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அந்த ஆசிரியர்கள் 21 நாட்கள் சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்திற்கான பயிற்சிகளை கட்டாயம் மேற்கொள்ளவேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு எவ்வித பயிற்சியும் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உடனடியாக பயிற்சி வழங்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி கல்வித்துறையில் காலியாக இருக்கும் இயக்குநர் பதவியை உடனே நிரப்ப வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.