குழவி கல்லை போட்டு மனைவி கொலை கணவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் புதுச்சேரி கோர்ட் தீர்ப்பு
புதுச்சேரி: நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்த கணவருக்கு, 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட் தீர்ப்பளித்தது.புதுச்சேரி முத்திரையர்பாளையம், காமராஜர் தெருவை சேர்ந்தவர் பாபு (எ) பரந்தாமன்,58; பால் வியாபாரி. இவரது மனைவி ரதிகலா,45; குருமாம்பேட்டில் உள்ள பவுடர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு யோகலட்சுமி என்ற மகளும், அரவிந்தன் என்ற மகனும் உள்ளனர். யோகலட்சுமி திருமணமாகி குடும்பத்துடன் கடலுாரில் வசித்து வருகிறார். மகன் அரவிந்தன் பிளம்பர் வேலை செய்து கொண்டு, தாய் தந்தையுடன் வசித்தார்.ரதிகலா நடத்தையில் பாபுவிற்கு சந்தேகம் ஏற்பட்டதால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு மே 25ம் தேதி இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் துாங்க சென்றுவிட்டனர்.மறுநாள் அதிகாலையில் எழுந்த பாபு, துாங்கி கொண்டிருந்த மனைவி ரதிகலா தலையில், கிரைண்டர் குழவி கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.இதுகுறித்த புகாரின் பேரில் பாபுவை கைது செய்த மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், அவர் மீது மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், பாபுவிற்கு 10 ஆண்டு கடுங்காவல் மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.