உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிரிக்கெட் அணிக்கு தேர்வாகாததால் ராஜஸ்தான் மாணவி தற்கொலை

கிரிக்கெட் அணிக்கு தேர்வாகாததால் ராஜஸ்தான் மாணவி தற்கொலை

புதுச்சேரி: புதுச்சேரியில் தங்கி படித்து வந்த ராஜஸ்தானை சேர்ந்த கல்லுாரி மாணவி, டி 20 போட்டிக்கான அணிக்கு தேர்வாகாததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் காஷ்மீர் குமார்; ஜி.எஸ்.டி., கண்காணிப்பாளரான. இவர் கடந்த 12 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறார். இவரது மகள் ஏஞ்சல் கங்கவாணி, 19; பெற்றோரை பிரிந்து, கடந்த 2 ஆண்டுகளாக புதுச்சேரி, கதிர்காமம், சொக்கநாதன் பேட்டை, எஸ்.வி. நகரில் துரைராஜ் என்பவர் வீட்டில் வாடகைக்கு தங்கி, வேல்ராம்பட்டு தனியார் கல்லுாரியில் பி.பி.ஏ., 2ம் ஆண்டு படித்து வந்தார். கிரிக்கெட்டில் ஆர்வமுடைய ஏஞ்சல் கங்கவாணி, திலாஸ்பேட்டை கனகன் ஏரி அருகே பயிற்சியாளர் கதிர்வேல் என்பவரது ஸ்டார் கிரிக்கெட் கோச்சிங் சென்டரில் இணைந்து பயிற்சி பெற்று வந்தார்.  இந்நிலையில், கடந்த மாதம் துத்திப்பட்டு சி.பி.ஏ.,வில் நடந்த டி20 போட்டிக்கான புதுச்சேரி அணி  வீராங்கனைகள் பட்டியலில் ஏஞ்சல் கங்கவாணி பெயர் இடம் பெறவில்லை. இதனால், மனமுடைந்து யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்த ஏஞ்சல் கங்கவாணி, பயிற்சியாளர் கதிர்வேலை மொபைலில் பலமுறை அழைத்துள்ளார். அப்போது, கதிர்வேல் மருத்துவமனையில் இருந்ததால், ஏஞ்சல் கங்கவாணியின் அழைப்பை ஏற்க முடியவில்லை. பின், கதிர்வேல் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபின், கங்கவாணியை மொபைலில் அழைத்தபோது, அவர் எடுக்கவில்லை. சந்தேகமடைந்த பயிற்சியாளர் கதிர்வேல், ஏஞ்சல் கங்கவாணி தங்கியுள்ள வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் அறையில் உள்ள பேனில் துாங்கில் தொங்கி கொண்டிருந்தார். இதையடுத்து, பயிற்சியாளர் கதிர்வேல் வீட்டின் உரிமையாளர் துரைராஜ் உதவியுடன், ஏஞ்சல் கங்கவாணியை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து ஏஞ்சல் கங்கவாணி இறந்து விட்டதாக தெரிவித்தார்.  இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் துரைராஜ், ஏஞ்சல் கங்கவாணியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததுடன், கோரிமேடு போலீசில் புகார் அளித்தார்.  அதன்பேரில், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து மாணவி ஏஞ்சல் கங்கவாணி தங்கிருந்த வீட்டை சோதனை செய்தபோது, அவர் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், என் மரணத்திற்கு நான் தான் காரணம். வேறு யாரையும் குறைசொல்ல விரும்பவில்லை. அம்மா, அப்பா மிஸ் யூ என எழுதப்பட்டிருந்தது. அவரது மொபைலை சோதனையிட முயன்றபோது அது லாக் செய்யப்பட்டிருந்தது. இதனால், டி20 கிரிக்கெட் போட்டிக்கான அணிக்கு தேர்வாகாத விரக்தியில் ஏஞ்சல் கங்கவாணி தற்கொலை செய்து கொண்டரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ