சென்னையில் கார் பந்தயம் நடத்துவதன் மூலம் தொழில் முதலீட்டாளர்களை இழுக்க முடியும் திருமாவளவன் எம்.பி.,
புதுச்சேரி: கார் பந்தயம் நடத்துவதன் மூலம் தொழில் முதலீட்டாளர்களை இழுக்க முடியும் என வி.சி.கட்சி., தலைவர் திருமாவளவன் எம்.பி., தெரிவித்தார்.புதுச்சேரி கோர்ட்டில் நடைபெற்று வரும் அவதுாறு வழக்கு விசாரணைக்கு ஆஜரான வி.சி.க., தலைவர் திருமாவளவன் எம்.பி., கூறியதாவது:புதுச்சேரியில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில் நான், பகை துாண்டும் வகையில் பேசியதாக என் மீது பொய் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தலைமறைவானவர் என குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.இந்நிலையில் நீதிபதி முன் நேரில் ஆஜராகி வழக்கை விரைந்து நடத்தவும், பொய் வழக்கில் இருந்து விடுவிக்க விண்ணப்பம் அளித்துள்ளேன்.சென்னையில் விளையாட்டு துறை சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கார் பந்தயமும் ஒன்று. இதுபோன்ற போட்டிகள் நடத்துவதன் மூலம் தலைநகர் சென்னையில் சுற்றுலா பயணிகளையும், தொழில் முதலீட்டாளர்களையும் கவர்ந்திழுக்க ஏதுவாக இருக்கும். பெங்களூரு, மும்பை, டில்லி போன்ற பெரு நகரங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடத்துவதன் மூலமே தொழில் முதலீடுகள் பெருகுகின்றன. எனவே, நல்லெண்ண அடிப்படையில் மேற்கொள்ளும் முயற்சி என்பதால் தான் கார் பந்தயத்தை நடத்தலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.புதுச்சேரி மாநில அந்தஸ்த்து கிடைக்க இந்தியா கூட்டணி எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி கூறியதை வரவேற்கிறோம். அதனை வலியுறுத்துவோம் என்றார்.