லீவுக்கு பீஸ ் கேட்ட ஐ.ஆர்.பி.என்., உதவி கமாண்டன்ட் இடமாற்றம்
புதுச்சேரி : 'லீவுக்கு பீஸ்' கேட்ட விவகாரத்தில் சிக்கிய ஐ.ஆர்.பி.என்., உதவி கமாண்டர் காரைக்காலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.ஐ.ஆர்.பி.என்., உதவி சப்இன்ஸ்பெக்டர் சந்திரன். கடந்த மே மாதம் தனது உதவி கமாண்டன்ட் கோபிக்கு போன் செய்து, தனக்கு மருத்துவ விடுமுறை (லீவு) வேண்டும் என கேட்டார். அதற்கு, 'லீவு வேண்டுமானால் எனக்கு ஒரு 'பீஸ்' (பெண்) ஏற்பாடு செய்து கொடு' என கேட்கும் உரையாடல் ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இந்த விவகாரம் தொடர்பாக புகார் ஏதும் அளிக்க கூடாது என தனது கணவரை மிரட்டுவதாக சந்திரன் மனைவி ஆர்த்தீஸ்வரி, ஐ.ஆர்.பி.என். ,தலைமை கமாண்டரிடம் புகார் அளித்தார். டி.ஜி.பி., சந்தித்து முறையிட அனுமதி கேட்ட ஆர்த்தீஸ்வரிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கடந்த 6ம் தேதி டி.ஜி.பி., அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார். கோபி மீதான புகார் தொடர்பாக ஐ.ஆர்.பி.என்., தலைமை கமாண்டன்ட் விசாரணை நடந்து வருகிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக உதவி கமாண்டன்ட் கோபிக்கு எந்தவித பணி பொறுப்பும் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், ஐ.ஆர்.பி.என்., உதவி கமாண்டன்ட் கோபி நேற்று காரைக்காலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.