நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 15,186 மாணவர்கள் சென்டாக்கில் பதிவு
புதுச்சேரி; நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இதுவரை 15,186 பேர் பதிவு செய்துள்ளனர்.புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் உள்ள இடங்கள் சென்டாக் மூலம் உயர் கல்வி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்தாண்டிற்கான சென்டாக் விண்ணப்பம் ஆன்லைனில் கடந்த மாதம் 12ம் தேதி முதல் துவங்கியது. மாணவ, மாணவிகள் போட்டிக் போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று வரை நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 15,186 பேர் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இ.மெயில் மூலம் பதிவு செய்திருந்தனர். இதில் 12,699 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து இருந்தனர்.புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 10,471 மாணவர்களும், பிற மாநிலங்களில் இருந்து - 2,231 மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். உயிரியல் சார்ந்த டிகிரி படிப்புகளுக்கு 4,851 பேர், பி.பார்ம்-4,276, அக்ரி- 2,472, பி.டெக்.,- 5,981, சட்டபடிப்பு- 489, டிப்ளமோ- 1,519 டி.ஏ.என்.எம்.,- 900 பி.வி.ஓ.சி.,- 1,001 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கலை அறிவியல் படிப்புகளுக்கு 6,735 விண்ணப்பங்கள் குவிந்துள்ன.வரும் 7ம் தேதி வரை சென்டாக் ஆன்லைனில் (www.centacpuducherry.in) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நீட் அல்லாத யூ.ஜி., தொழில் முறை படிப்புகளாக பி.டெக்., பி.ஆர்க், பி.எஸ்சி., வேளாண்மை மற்றும் தோட்டக்கலை, பி.வி.எஸ்சி., (கால்நடை மருத்துவம்), பி.எஸ்சி., நர்சிங்., பி.பி.டி., பி.எஸ்சி., துணை மருத்துவ டிப்ளமோ படிப்புகள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பம் கட்டணம்:நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது. தொழில்முறை டிகிரி, டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க எஸ்.சி., - எஸ்.டி., மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 500 ரூபாய், இதர பிரிவினருக்கு 1,000 ரூபாய், பிற மாநில மாணவர்களுக்கு 1,500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கலை அறிவியல், வணிகவியல், நுண் கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகளுக்கு 150 ரூபாய், இதர பிரிவினருக்கு 300 ரூபாய், பிற மாநில மாணவர்களுக்கு 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். தொழில்முறை டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்புளுக்கு சேர்த்து விண்ணப்பிக்க எஸ்.சி., - எஸ்.டி., மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 500 ரூபாய், இதர பிரிவினருக்கு 1,000 ரூபாய், பிற மாநில மாணவர்களுக்கு 1,500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். என்.ஆர்.ஐ., மற்றும் என்.ஆர்.ஐ., ஸ்பான்சர்டு, ஓ.சி.ஐ., மற்றும் ஓ.சி.ஐ., ஸ்பான்சர்டு பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.