பாகூர் பகுதியில் தீவாக மாறிய 20 கிராமங்கள் படம் - 493 , 460 ,
பாகூர்: தென்பெண்ணையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், பாகூர் பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் தீவுகளாக மாறியுள்ளன.சாத்தனுார் அணையில் இருந்து திறக்கப்பட்ட 1.70 லட்சம் கனஅடி நீர், தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், கரையோரத்தில் உள்ள புதுச்சேரி பகுதிகளான இருளஞ்சந்தை, குருவிநத்தம், பாகூர், கொம்மந்தான்மேடு, ஆராய்ச்சிக்குப்பம், சோரியாங்குப்பம் கிராமங்களில் புகுந்து, 5,000 மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக பாகூர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, தனி தனி தீவுகளாக மாறி உள்ளன. வெள்ளத்தில் இருந்து தப்பிக்க பலர், வீட்டின் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். வீடுகளில் இருந்து வெளியேறியவர்கள் முகாம் மற்றும் அருகில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை, போலீசார் மற்றும் இளைஞர்கள் துணையுடன் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிகளை செந்தில்குமார் எம்.எல்.ஏ., பார்வையிட்டு உணவு பொருட்கள் வழங்கி வருகிறார்.பாகூர் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. பாகூர் பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை, கவர்னர் கைலாஷ்நாதன், அமைச்சர் லட்சுமி நாராயணன், கலெக்டர் குலோத்துங்கன் தனித்தனியாக ஆய்வு செய்து, மக்களுக்கு ஆறுதல் கூறினர்.