மீனவர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம்
புதுச்சேரி: மத்திய மீன்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மீன்வள கடல்சார் மற்றும் பொறியியல் பயிற்சி நிலையத்தின் சார்பில் பிரதம மந்திரியின் மத்திய யோஜனா திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, தேங்காய்திட்டு துறைமுக கருத்தரங்க கூடத்தில், புதுச்சேரி மீனவர்களுக்கு மீன்பிடி படகு இயந்திரம் பழுது நீக்கலும் பராமரித்தலும் என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. மீன் வளத் துறை இணை இயக்குனர் தெய்வசிகாமணி சிறப்புரையாற்றினார்.மத்திய மீன் வள கடல்சார் பொறியியல் பயிற்சி நிலையத்தின் பயிற்சி வல்லுநர் மணிமாறன், மீன்பிடி படகு இயந்திரம் பழுது நீக்கல் பராமரித்தல் சம்பந்தமாக செயல்முறை பயிற்சி அளித்தார். பயிற்சி முகாமில் படகு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.பயிற்சி நாளை 5ம் தேதி நிறைவடைகிறது. ஏற்பாடுகளை மீன்வளத் துறை துணை இயக்குனர் ராஜேந்திரன் செய்திருந்தார்.