பல்கலை மாணவர்களை விடுவிக்க நடவடிக்கை : நிர்வாகம் அறிவிப்பு
புதுச்சேரி : பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக நிர்வாக செய்திக்குறிப்பு: புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் சில மாணவர்கள் குழு ,குற்றம் சாட்டப்பட்ட பிரச்னைகள் தொடர்பாக, நிர்வாக கட்டடத்தை நோக்கி நேற்று முன்தினம் பேரணியில் ஈடுபட்டனர். அவர்களின் குறைகள் குறித்து பேச பல்கலைக்கழக அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, மாணவர்களின் பிரதிநிதிகளை சந்தித்து பிரச்னைகளை தீர்ப்பதற்கான உறுதிமொழி அளித்தது. இருப்பினும், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, இரவு 11:00 மணிக்கு துணை வேந்தர் அலுவலகத்திலிருந்து வெளியேறும் போது அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தினர். துறை தலைவர், துணை பதிவாளர், பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரின் வாகனத்தையும் தடுத்து, 30 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தி வைத்தனர். அதன்பின், மாணவர்கள் காலாப்பட்டு போலீஸ் ஸ்டேஷன் அதிகாரி மற்றும் சிறப்பு அதிகாரி ஆகியோரை சிறைபிடித்தனர். மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கையை பரிசீலித்து எழுத்துப் பூர்வமாக உத்தரவாதம் வழங்கியும், மாணவர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், மோதல் சூழ்நிலையாக மாறியது. அதில், போலீசாரை தாக்கி காயப்படுத்திய சில மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.