போர்க்கால சட்ட அடிப்படையில் காங்., தலைவர் மீது நடவடிக்கை அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்
புதுச்சேரி: பாகிஸ்தான் மீதான தாக்குதலில் பிரதமரின் ராஜ தந்திரத்தை குற்றம் சாட்டிய, காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் மீது போர்க்கால சட்ட அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.அவர், கூறியதாவது:புதுச்சேரி முதல்வர் மற்றும் கவர்னர் இடையே பனிப்போர் ஏற்பட்டிருப்பது, மாநில வளர்ச்சிக்கு நல்லதல்ல. இருவரும் இணைந்து தனியார் மருத்துவ கல்லுாரியில் 50 சதவீத இடங்களை அரசின் இடஒதுக்கீடாக பெற்று தர வேண்டும்.காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் சுட்டு கொன்றனர். தொடர்ந்து, இரு நாட்டினிடையே ஏற்பட்ட போரில், பாகிஸ்தானில் 8க்கும் மேற்பட்ட விமான தளங்களை இந்திய ராணுவம் நிர்மூலமாக்கியது. கதிகலங்கிய பாகிஸ்தான் சமாதான துாதுவிட்டதன் விளைவாக தாக்குதல் நிறுத்தப்பட்டது.பிரதமரின் இந்த ராஜதந்திரத்தை, உலக தலைவர்கள் பாராட்டுகின்றனர். ஆனால், பிரதமர் மோடி, போரை பாதியில் நிறுத்திவிட்டதாக காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். அவர் மீது போர்க்கால சட்ட அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு பள்ளி மாணவர்கள் முதல் முறையாக சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் பொதுத் தேர்வு எழுதினர். இதில், 10ம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் மட்டும் அதிக மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். அப்பாடத்தை கற்றுக் கொடுக்க திறமை வாய்ந்த ஆசிரியர்கள் இல்லை. எனவே, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும்' என்றார்.