உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சட்டம் ஒழுங்கு என்ன என்பது புரியவில்லை பா.ஜ., எம்.எல்.ஏ., ஜான்குமார் குற்றச்சாட்டு

சட்டம் ஒழுங்கு என்ன என்பது புரியவில்லை பா.ஜ., எம்.எல்.ஏ., ஜான்குமார் குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரியின் சட்டம் ஒழுங்கு என்னவென்றே எனக்கு புரியவில்லை. குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ய வேண்டும் என பா.ஜ., எம்.எல்.ஏ., ஜான்குமார் ஆவேசமாக தெரிவித்தார்.இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் அண்மை காலமாக முதல்வர், கவர்னர் வீடுகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் வருகின்றது. புதுச்சேரியின் சட்டம் ஒழுங்கும் என்னவென்றே புரியவில்லை. இப்பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக பிரதமர், மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து முறையிட உள்ளேன். போலீஸ் துறை சிறப்பாக செயல்பட மத்திய அரசின் உதவி தேவை. தவறு செய்யும் ரவுடிகளுக்கு பயம் வர வேண்டும். மோசமான குற்றங்களை செய்வோரை என்கவுன்டர் செய்ய வேண்டும். அப்போது தான் குற்றவாளிகளுக்கு பயம் வரும்.தமிழகத்தில், குற்றவாளிகள் மீது போலீசார் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கின்றனர். உத்திரபிரதேசத்தில் எவ்வளவு குற்றங்கள் நடந்தது. இப்போது அங்கு பாருங்கள் ரவுடிகளை அடக்க தினமும் என்கவுன்டர் நடக்கின்றது. சுட்டு கொலை செய்ய வேண்டும் என்பதில்லை. காலையாவது சுட வேண்டும். கடும் நடவடிக்கை எடுத்தால்தான் குற்றங்கள் குறையும். பா.ஜ., பிரமுகர் உமாசங்கர் கொலை வழக்கில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி சி.பி.ஐ.,விசாரணை கோரியுள்ளார். அதற்கு மேல் விசாரணை இருந்தால் கூட வைக்கலாம். உண்மை குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்றார். பேட்டியின்போது ரிச்சர்ட் எம்.எல்.ஏ., உடனிருந்தார்.

புதுச்சேரி அரசியலில் பரபரப்பு

புதுச்சேரியில் என்.ஆர்.காங்.,-பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கின்றது. பா.ஜ., வை சேர்ந்த நமச்சிவாயம் தான் போலீஸ் துறையின் அமைச்சராக உள்ளார். இந்நிலையில், பா.ஜ., எம்.எல்.ஏ.,வே புதுச்சேரியின் சட்டம் ஒழுங்கு ஒன்றும் புரியவில்லை எனக் கூறியதோடு, இதுகுறித்து பிரதமர் மற்றும் ,மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க இருப்பதாக கூறியிருப்பது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை