புதுச்சேரி ஜனநாயக திருவிழாவில் பங்கேற்க... முடியுமா?வெளி மாநிலங்களில் உள்ள வாக்காளர்கள் ஏக்கம் ஓட்டு பதிவு குறையும் என்பதால் வேட்பாளர்கள் கலக்கம்
புதுச்சேரி: தமிழகத்துடன் பின்னிப் பிணைந்துள்ள புதுச்சேரியில் தனியாக தேர்தல் நடத்துவதால், ஓட்டு பதிவு சதவீதம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு குறையும் நிலை உள்ளதால், பிரதான கட்சி வேட்பாளர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசம், தமிழகம் , ஆந்திரா மற்றும் கேரளாவில் பின்னிப் பிணைந்துள்ளது. மொத்தம் 9.44 லட்சம் வாக்காளர்கள் கொண்ட புதுச்சேரியில் 30 சட்ட சபை தொகுதிகள் உள்ளன. அவற்றில் 23 தொகுதிகள் புதுச்சேரி பிராந்தியத்திலும், 5 தொகுதிகள் காரைக்கால் பிராந்தியத்திலும், மற்ற இரு தொகுதிகள் முறையே கேரளா மறறும் ஆந்திர மாநிலத்திலும் உள்ளது. பெரும்பான்மையான தொகுதிகள் தமிழகத்தினுடையே பின்னி பிணைந்துள்ளது. இதன் காரணமாகவே கடந்த காலங்களில் சட்டசபை தேர்தல்கள் தமிழகத்தோடு சேர்த்தே நடத்தப்பட்டு வந்தது. தேர்தல் அறிவிப்பு இந்நிலையில், கடந்த 15ம் தேதி புதுச்சேரி, தமிழகம், கேரளம், அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில், புதுச்சேரி, கேரளா மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக வரும் 9ம் தேதியும், தமிழகத்திற்கு இரண்டாம் கட்டமாக வரும் 23ம் தேதி ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்திற்கு வரும் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடைபெறும் என அறிவித்துள்ளது. ஓட்டு பதிவு குறையும் ஆபத்து தமிழகத்துடன் பின்னிப் பிணைந்துள்ள புதுச்சேரிக்கு இம்முறை தனியாக தேர்தல் நடப்பதால், ஓட்டுப் பதிவு சதவீதம் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது. காரணம் ஓட்டுப்பதிவு வார நாளான வியாழன் அன்று (9ம் தேதி) நடக்கிறது. அன்று புதுச்சேரி மாநிலத்திற்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், புதுச்சேரியை சேர்ந்த பட்டதாரிகள், இளைஞர்கள் 50 சதவீதத்தினருக்கு மேல் தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணி புரிந்து வருகின்றனர். புதுச்சேரியில் ஓட்டுப் பதிவு நடைபெறும் 9ம் தேதி, தமிழகத்தில் வேலை நாளாக உள்ளது. அதனால், தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணி புரியும் புதுச்சேரி பட்டதாரிகள் தங்கள் மாநில சட்டசபை தேர்தலில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சிதறும் ஓட்டுகள் சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியில் சராசரியாக சட்டசபை தொகுதிக்கு 32 ஆயிரம் வாக்காளர்களே உள்ளனர். இதனால், ஒரு ஓட்டு கூட வெற்றி, தோல்வியை மாற்றி அமைக்கும் நிலை உள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலில் மாநிலத்தில் தே.ஜ., கூட்டணி, இண்டி கூட்டணி, த.வெ.க., கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. போதாக்குறைக்கு பல தொகுதிகளில் பிரதான கட்சிகளின் அதிருப்தி வேட்பாளர்களும் சுயேச்சைகளாக களம் இறங்கி உள்ளனர். ஓட்டு வேட்டை இதனால், பதிவாகும் ஒவ்வொரு ஓட்டும் விலை மதிப்பு மிக்கவை என்பதை உணர்ந்து வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் 1,000 முதல் 2000 பட்டதாரிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள் தமிழகத்தில் வேலை செய்கின்றனர். தமிழகத்தில் வரும் 9ம் தேதி வேலை நாள் என்பதால், அவர்களால், புதுச்சேரிக்கு வந்து ஜனநாயக திருவிழாவில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அல்லாடும் வேட்பாளர்கள் இதனை அறிந்த பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், வெளியூர்களில் உள்ள புதுச்சேரி மாநில பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் ஓட்டுகளை எப்படி பெறுவது எனப் புரியாமல் அல்லாடிக் கொண்டுள்ளனர். தேர்தல் துறை கவனத்திற்கு நுாறு சதவீத ஓட்டுப்பதிவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் புதுச்சேரி தேர்தல் துறை, வெளி மாநிலங்களில் உள்ள புதுச்சேரி வாக்காளர்களின் ஓட்டுகளை சிந்தாமல், சிதறாமல் பதிவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தலைமை தேர்தல் ஆணையம் மூலம், தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மூலம் அந்தந்த மாநிலங்களில் பணிபுரியும் புதச்சேரி வாக்காளர்கள், ஜனநாயக திருவிழாவில் பங்கேற்க ஏதுவாக சம்பளத்துடன் கூடிய விடுமுறை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கோட்டை விட்ட தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை புதுச்சேரியில் தன் ஓட்டுப்பதிவு அதிகமாக இருந்து வந்துள்ளது. அதிகப்பட்சமாக 82 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி 25ம் தேதி புதுச்சேரியில் தேர்தல் பணிகளை ஆய்வு செய்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது. அதனால், இம்முறை தேர்தலில் ஓட்டுப் பதிவில் புதுச்சேரி புதிய சாதனை படைக்கும் என்றார். தலைமை தேர்தல் ஆணையரின் கூற்றை மெய்ப்பிக்க புதுச்சேரி தேர்தல் துறையும், அனைவரும் ஓட்டு போட வலியுறுத்தி கடந்த இரு வாரங்களாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ஆனால், இம்முறை தேர்தலை வழக்கத்திற்கு மாறாக புதுச்சேரிக்கு தனியாக அதுவும் வேலை நாட்களான வரும் 9ம் தேதி நடைபெற உள்ளதால், பணி நிமித்தமாக தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஓட்டு போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்காத கோரிக்கை புதுச்சேரிக்கு வருகை தந்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், அரசியல் கட்சி பிரமுகர்களை சந்தித்து தேர்தல் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது, கள்ள ஓட்டை தடுக்க வழக்கம் போல் தமிழகத்துடன் புதுச்சேரிக்கும் தேர்தல் நடத்த வேண்டும். குறிப்பாக புதுச்சேரிக்கு தமிழகத்துடனும், புதுச்சேரியை சேர்ந்த மாகி பிராந்தியத்திற்கு கேரளாவுடன் தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால், தேர்தல் ஆணையம் வழக்கத்திற்கு மாறாக புதுச்சேரிக்கு தனியாக தேர்தலை அறிவித்துள்ளது.