மீனவ மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை முதல்வர் ரங்கசாமி தகவல்
புதுச்சேரி: பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டப்பணிகள் துவக்க விழாவில், முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மத்திய அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.புதுச்சேரியில் மீனவ சமுதாய மக்கள் மகிழ்ச்சியாகதான் இருப்பீர்கள். அவர்கள் அரசை அணுகி கோரிக்கைகள் வைத்தால், அதனை நிறைவேற்றி தரும் அரசாக தான் உள்ளது. எந்த கோரிக்கையையும் மறுத்தது இல்லை. தற்போது,கேட்கப்பட்டுள்ள தாழ்பட்ட மாணவர்களுக்கு முழு கல்வி உதவி வழங்கப்படுவது போன்று, மீனவ சமுதாய மாணவர்களுக்கும் அரசின் முழு கல்வி உதவிகையை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதை அரசு நிறைவேற்றி கொடுக்கும், அதற்கான திட்டங்களை செயல்படுத்த அரசு துவங்கிவிட்டது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.கடல் அரிப்பை முழுமையாக தடுப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. இதற்கு, மத்திய அரசும் உதவி செய்து வருகிறது. கடந்த ஆண்டு ரூ.123 கோடி மீன்வளத்துறைக்கு செலவு செய்துள்ளோம். இந்த ஆண்டும் பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி முழுமையாக செலவு செய்யப்படும். மத்திய அரசு உதவி இருந்தால்தான் நாம் வளர்ச்சி அடைய முடியும்.இதனால், மத்திய அரசு நிதியும், உதவியும் அவசியம். யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் அனைத்து துறைகளும் இதற்காக விரைந்து செயல்பட வேண்டும். பிரதமர் எண்ணத்தின்படி புதுச்சேரியை வளர்ச்சி பெற்ற மாநிலமாக்க அரசு செயல்பட வேண்டும். என்றார்.