விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணியில் இட ஒதுக்கீடு முதல்வர் ரங்கசாமி தகவல்
புதுச்சேரி : விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அரசு பணியில் இடஒதுக்கீடு அளிக்கப் படும் என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.புதுச்சேரி அரசு விளையாட்டு மற்றும் இளைஞர் நல இயக்குனரகம் சார்பில், லாஸ்பேட்டை உள்விளையாட்டு அரங்கில் மரத்திலான தரைத்தளம் திறப்பு மற்றும் தேசிய விளையாட்டு தின பரிசளிப்பு விழா நடந்தது.விளையாட்டு துறை செயலர் அமர்நாத் தல்வாடே வரவேற்றார். முதல்வர் ரங்கசாமி உள் விளையாட்டு அரங்க தரைத் தளத்தை திறந்து வைத்து, தேசிய விளையாட்டு தின போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் பரிசுகள் வழங்கினார்.சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ., ஆகியோர் வாழ்த்தி பேசினர். விளையாட்டு மற்றும் இளைஞர் நல இயக்குனரகம், இயக்குனர் பிரியதர்ஷினி நன்றி கூறினார். விழாவில், முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:லாஸ்பேட்டை உள்வியைாட்டு அரங்கம் அமைக்கப்பட்டபோது, முழுமை பெறாமல் இருந்தது. பின், ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் மரத்திலான தரைத்தளம் அமைக்கப்பட்டது. இதில், ஏ.சி., அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புறங்களில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்படும். மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்படும். அதற்காக பல்வேறு பிரிவுகளில் விளையாட்டு வீரர்களின் தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், அவர்களுக்கு எல்.டி.சி., யு.டி.சி., உள்ளிட்ட அரசு பணிகளில் விரைவில் வாய்ப்பு வழங்கப்படும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.முன்னதாக, உள்விளையாட்டு அரங்கில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஒரு அணியாகவும், சபாநாயகர் செல்வம், கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ., மற்றொரு அணியாகவும் பேட்மிட்டன் விளையாடினர்.