கொசு மருந்து தெளிப்பு கொம்யூன் ஆணையர் ஆய்வு
திருக்கனுார் : டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கூனிச்சம்பட்டில் கொசு மருந்து தெளிக்கும் பணியினை ஆணையர் எழில்ராஜன் நேற்று பார்வையிட்டார்.புதுச்சேரியில் கொசு உற்பத்தி காரணமாக டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி முதல்வர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து மூலம் கிராமப்புறங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இதன் ஒருபகுதியாக திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் நேற்று வீதி, வீதியாக கொசு மருந்து தெளிக்கும் பணி நடந்தது. இப்பணியினை ஆணையர் எழில்ராஜன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, கிராமத்தின் அனைத்து வீதிகளிலும் உள்ள கழிவுநீர் வாய்க்கால் மற்றும் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் கொசு மருந்துகளை தெளிக்கும் போது கவனம் செலுத்த வேண்டும். சாலை ஓரங்களில் குளோரின் பவுடர் போடுதல், புகை தெளிப்பான் உள்ளிட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.மேலும், டெங்கு காய்ச்சல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.