உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிலிண்டர் விநியோகத்தில் தில்லாலங்கடி: அல்லல்படும் நுகர்வோர்கள்

சிலிண்டர் விநியோகத்தில் தில்லாலங்கடி: அல்லல்படும் நுகர்வோர்கள்

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் போர் தொடுத்துள்ளதன் காரணமாக இந்தியாவில் காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலமையை சமாளிக்க மத்திய அரசு வர்த்தக சிலிண்டர்களின் விலையை இரு மடங்காக உயர்த்தியது. வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வர்த்தக சிலிண்டரின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளதால், வீட்டு உபயோக சிலிண்டர் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி புதுச்சேரியில் உள்ள காஸ் விநியோகஸ்தர்கள், நுகர்வோர்கள் உரிய காலக்கெடு முடிந்து பதிவு செய்து, எண்ணெய் நிறுவனங்களில் இருந்து 'டெலிவரி' தேதி மற்றும் ஓ.டி.பி., வந்த போதிலும், உரிய நேரத்தில் சிலிண்டர் வழங்காமல் காலம் கடத்தி, நுகர்வோர்களை அலைக்கழித்து வருகின்றனர். சமீபத்தில் வில்லியனுார் பகுதியை சேர்ந்த நுகர்வோர்கள், அதே பகுதியில் உள்ள காஸ் ஏஜென்சியில் முன் பதிவு செய்து, அதற்கான ஓ.டி.பி., வைத்துள்ளனர். பதிவு செய்த பிறகு ஓரிரு நாளில் சிலிண்டர் வழங்கப்பட்டுவிட்டதாக குறுஞ்செய்தியும் சம்மந்தப்பட்ட நுகர்வோரின் மொபைல் போனிற்கு வந்துவிடுகிறது. இதுகுறித்து, ஏஜென்சியிடம் சென்று கேட்டால், சிலிண்டர் லோடு வரவில்லை எனக்கூறியே, வாரக்கணக்கில் அலையவிட்டு, அவர்களது சிலிண்டரை கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு வர்த்தக பயன்பாட்டிற்கு விற்று விடுகின்றனர். இதனை அறியாமல், பாமர நுகர்வோர்கள் காஸ் புத்தகம், ஓ.டி.பி., எண்ணுடன் காஸ் ஏஜென்சி நிறுவனங்களுக்கு நடையாய் நடந்துக் கொண்டுள்ளனர். காஸ் ஏஜென்சிகளின் இந்த முறைகேட்டை அறிந்துள்ள சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளும் என்ன காரணத்தினாலோ கண்டும் காணாமல் உள்ளனர். இனியேனும், காஸ் ஏஜென்சிகளில் நடக்கும் தில்லாலங்கடி மோசடி தடுத்து நிறுத்தி, நுகர்வோர்களுக்கு முறைப்படி உரிய நேரத்தில் காஸ் சிலிண்டர்கள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை