முதல்வர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்
புதுச்சேரி : கவர்னரின் ஒப்புதல் பெற்று பணி நிரந்தரம் செய்யப்படும் என, முதல்வர் உறுதியளித்ததை ஏற்று, ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டதை விலக்கி கொண்டனர்.புதுச்சேரி கல்வித் துறையில் கடந்த 2021ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் விரிவுரையாளர்கள், துவக்க பள்ளி ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், பாலசேவிகா ஆசிரியர்கள் 288 பேர் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கான ஒப்பந்தம் ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கடந்த 31ம் தேதியுடன் ஒப்பந்தம் முடிந்த நிலையில் நீட்டிக்கப்படவில்லை. இதனை கண்டித்தும், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி கடந்த 2ம் தேதி முதல் மிஷன் வீதி மாதா கோவில் எதிரே தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.போராட்டம் நான்காவது நாளாக நீடித்த நிலையில், புதுச்சேரி தாசில்தார் பிரீத்திவி, கிழக்கு எஸ்.பி., ரகுநாயகம், இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், செந்தில்குமார், தனசேகரன், கார்த்திகேயன் ஆகியோர் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.முதல்வரை சந்தித்து கோரிக்கையை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்படும். சாலையை அடைத்து போராட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தனர். இருப்பினும் போராட்டத்தை விலக்கி கொள்ளாமல் ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். மயங்கி விழுந்த ஆசிரியைகள்
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட மாரியம்மாள், ஸ்டெல்லா, சங்கீதா, நர்கீஸ் உள்பட நான்கு ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களை போலீசார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.தொடர்ந்து, பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றீர்கள். எப்.ஐ.ஆர்., போட்டால் எதிர்காலம் வீணாகும். உங்களை கைது செய்ய போகிறோம். நீங்களே வேனில் வந்து ஏறுங்கள் என்று தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.இதற்கிடையில், முதல்வர் ரங்கசாமி போராட்டம் நடத்திய ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். சட்டசபையில் ஆசிரியர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முதல்வர் ரங்கசாமி, அடுத்த ஆறு மாததிற்கு ஆசிரியர்களின் ஒப்பந்தத்தை நீடித்து தரப்படும் எனவும், அதற்குள் கவர்னரின் ஒப்புதல் பெற்று பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதையடுத்து போராட்டத்தை ஆசிரியர்கள் விலக்கி கொண்டனர்.
கதறி அழுத ஆசிரியைகள்
போராட்டம் நடத்த போலீசாரின் கெடுபிடி அதிகரித்ததும் ஆசிரியைகள் கதறி அழுதனர். நியாயமான முறையில் தான் போராட்டம் நடத்துகிறோம். எங்களை அச்சுறுத்துவதா என, கதறி அழுதனர். ஆசிரியர்களை போராட்டத்தை அறிந்த எதிர்க்கட்சி தலைவர் சிவா, வைத்திலிங்கம் எம்.பி., ஆறுதல் கூற வந்தனர். அவரது காலிலும் விழுந்த ஆசிரியைகள் தங்கள் எதிர்காலம் பறிபோய்விட்டதாக கதறி அழுதனர்.