| ADDED : மார் 05, 2026 04:49 AM
புதுச்சேரி: புதுச்சேரியின் நீர் பாதுகாப்பு மற்றும் விவசாயத்தை வலுப்படுத்த பி.எம்.கே.எஸ்.ஒய்., திட்டத்தின் கீழ், 78 பாசன ஏரிகளை சீரமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறை இயக்குநர் ஷீலா விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி பொதுப்பணித் துறை மூலமாக பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா (பி.எம்.கே.எஸ்.ஒய்) ஹர் கேத் கோ பானி திட்டத்தின் கீழ், 78 பாசன ஏரிகளை புதுப்பித்தல் மற்றும் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள உள்ளன. இதற்காக விரிவான திட்ட அறிக்கை, தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் அனுமதிகளுக்காக மத்திய நீர் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2 எக்டருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட 78 ஏரிகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் 54 முறைமை ஏரிகள், 24 முறைமையற்ற ஏரிகள் அடங்கும். இத்திட்டத்தில் ஏரிப்படுகைகளைத் துார்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், மதகுகள் மற்றும் உபரிநீர் வழிகளை மறுசீரமைத்தல், வரத்துக் கால்வாய்களை மேம்படுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்நிலைகளைச் சுற்றி நடைபாதைகள், இருக்கைகள் மற்றும் விளக்கு வசதிகள் அமைக்கப்படும். இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.496.73 கோடி ஆகும். இதன் மூலம் சுமார் 5,612.47 எக்டர் மற்றும் 858.18 எக்டர் பாசனப் பரப்புகள் பயன்பெறும். சீரமைப்புப் பணிகள் இரண்டு ஆண்டு காலத்திற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நீர்த்தேக்கத் திறன், நிலத்தடி நீர் மட்டம் மற்றும் விவசாய உற்பத்தித்திறன் கணிசமாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.