உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  டெபுடேஷன் ஊழியர்கள் ரிட்டர்ன் : அரசு அலுவலகங்களில் களேபரம்

 டெபுடேஷன் ஊழியர்கள் ரிட்டர்ன் : அரசு அலுவலகங்களில் களேபரம்

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் அலுவலகங்களில் டெபுடேஷன் (அயல் பணி) அடிப்படையில் பணியாற்றிய அரசு ஊழியர்கள், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், வேறு வழியின்றி அவர்களது அலுவலகத்திற்கே திருப்பி அனுப்பப் பட்டனர். புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் முடிந்து, புதிய அரசு பொறுப்பேற்கும்போது, முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை அரசு ஊழியர்கள் சூழ்ந்து கொண்டு 'டெபுடேஷன்' கேட்டு நச்சரிப்பது வழக்கம். மக்கள் பிரதிநிதிகளும், எந்தவித கவலையும் இல்லாமல் வேண்டப்பட்ட ஊழியர்களை தங்களது அலுவலகத்திற்கு அழைத்து கொள்வர். இதுபோல நுாற்றுக்கணக்கான ஊழியர்கள், அரசின் பல்வேறு அலுவலகங்களில் இருந்து அழைக்கப்பட்டு இருந்தனர். இதனால், அரசு அலுவலகங்கள் பலவற்றில் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு பணிகள் பாதிக்கப்பட்டன. சக ஊழியர்களுக்கு பணிச்சுமையும் ஏற்பட்டது. மக்கள் பிரதிநிதிகள் சிபாரிசு செய்வதால், அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி சட்டசபைக்கான தேர்தல் அறிவிப்பு நேற்று முன்தினம் மாலை வெளியானதை தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, சட்டசபையில் உள்ள முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் அலுவலகங்கள், வீடுகளில் டெபுடேஷனில் பணியாற்றிய அரசு ஊழியர்கள் உடனடியாக அவர்களது அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பப் பட்டனர். கடந்த 5 ஆண்டுகளாக ஜாலியாக இருந்த ஊழியர்கள் நேற்று காலை கும்பல் கும்பலாக தங்கள் அலுவலகத்திற்கு சென்றனர். 5 ஆண்டுகளுக்கு பிறகு எட்டிப் பார்ப்பதால் டெபுடேஷன் ஊழியர்களை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. மேலும், அவர்கள் ஏற்கனவே உட்கார்ந்திருந்த இடங்களில் சக ஊழியர்கள் அமர்ந்து பணியாற்றி கொண்டிருந்தனர். 'இது எனது இடம்' என டெபுடேஷன் ஊழியர் கேட்க... அங்கிருந்த ஊழியர்கள் மறுக்க... வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், பல அலுவலகங்களில் பரபரப்பு தொற்றி கொண்டது. அலுவலக உயரதிகாரிகள் தலையிட்டு பிரச்னையை தீர்க்க முயன்றனர். இதனால், காலை முதல் மாலை பல அலுவலகங்களில் கூச்சலும், குழப்பமுமாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ